தஞ்சாவூர்: நாடு முழுவதும் ஃபிப்ரவரி 28ம் தேதி நடத்தப்படும் பொதுவேலை
நிறுத்தம் குறித்த விளக்கக்கூட்டம், தஞ்சை ஏ.ஐ.டி.யு.சி., கட்டிட தொழிலாளர்
கிளைச்சங்கம் சார்பில் நடந்தது.தஞ்சை நகரில் கீழவாசல், காமராஜர் சிலை
அருகில் தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி., கட்டிட தொழிலாளர் கிளைச்சங்கம் சார்பில்
பொதுவேலை நிறுத்த விளக்கக்கூட்டம் நடந்தது. நகர செயலாளர் செல்வராஜ் தலைமை
வகித்தார்.
வியாகுலமேரி, தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடலுழைப்பு
தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சேவையா, கட்டுமான சங்க மாவட்ட செயலாளர்
செயலாளர் தில்லைவனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், விலைவாசி உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும்.
தேசத்தின் சொத்தான, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது.
ஒப்பந்த தொழிலாளர் முறையை தடை செய்ய வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம் வழங்க
வேண்டும். குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை திருத்த வேண்டும். கட்டுமானம்
உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்கு தனி நிதியம்
ஏற்படுத்த வேண்டும். அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும் உறுதி செய்யப்பட்ட
ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி நாடு முழுவதும் ஃபிப்ரவரி 28ம் தேதி நடத்தப்படும் பொது
வேலைநிறுத்தத்தை, பொதுமக்கள் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என
விளக்கப்பட்டது.இதில் ஏ.ஐ.டி.யு.சி., மாநில துணைத்தலைவர் சந்திரகுமார்,
துணைத்தலைவர் சுகுமாறன், உதவிச்செயலாளர்கள் சவுந்திரராஜன், அர்ச்சுணன்,
செல்வராஜ், பொருளாளர் தண்டாயுதபாணி மற்றும் ஏ.ஐ.டி.யு.சி கட்டிட தொழிலாளர்
சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும் கூட்டத்தில், அனைத்து தொழிலாளர்களும் ஃபிப்ரவரி 28ம் தேதி
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, அன்றைய தினத்தில் தஞ்சை, கும்பகோணம்,
பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது
என்றும் தீர்மானிக்கப்பட்டது.
