தேடல்

அங்கன்வாடி அமைப்பாளர், சத்துணவு பணியாளர் பணியிடத்துக்கு இன்டர்வியூ

நாமக்கல்: அங்கன்வாடி அமைப்பாளர், சத்துணவு பணியாளர் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடத்துக்கு, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நேர்முகத்தேர்வு நடந்தது. மாவட்டம் முழுவதும் இருந்து, ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 15 யூனியன்களில், பள்ளி சத்துணவு மையத்தில் பணியாற்ற, அமைப்பாளர், சமையலர், பணியாளர், உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், இரண்டு நாட்களாக நடந்தது.மாவட்ட வருவாய் அலுவலர் செங்குட்டுவன் தலைமை வகித்தார். சமையலர் பணியிடத்துக்கு, 63 காலிப்பணியிடம், சமையல் உதவியாளர் பணியிடத்துக்கு, 149 காலிப்பணியிடம் மற்றும் அமைப்பாளர் பணியிடத்துக்கு, 46 காலிப்பணியிடம் என மொத்தம், 263 பணியிடத்துக்கு மட்டுமே, மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், 2,300 பேர் விண்ணப்பித்திருந்தனர். நேற்று முன்தினம், அனைவரும் சான்றிதழ் சரிபார்க்கும் முகாமுக்கு வந்திருந்தனர். ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுக்கு தனித்தனியாக சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்தது. தேர்வு பெறுவோருக்கு, நேர்காணல் நடத்தி, பின் பணி நியமன உத்தரவு வழங்கப்படும்.நேற்று, அங்கன்வாடி பணியாளர், குறுவள மைய பணியாளர் மற்றும் உதவியாளர் காலிப்பணியிடத்துக்கான நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம், 1,598 மையங்கள் உள்ளன. அதில், பணியாளர் பணியிடத்துக்கு, 167 காலிப்பணியிடமும், குறுவள மையத்தில், 15 காலிப்பணியிடமும், உதவியாளர் பணியிடத்துக்கு, 228 காலிப்பணியிடம் என மொத்தம், 410 காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டிருந்தது.நேர்முகத்தேர்வில், சான்றிதழ் சரிபார்ப்பதற்காக, 192 அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள், விண்ணப்பித்தவர்களின் வயது, கல்வி தகுதி, சீனியாரிட்டி உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்தனர். நேர்முகத்தேர்வில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, நேர்காணல் நடத்தி, பணி நியமன உத்தரவு வழங்கப்படும்.நேர்முகத்தேர்வுக்கு வந்திருந்த பல பெண்கள், தங்களது கைக்குழந்தையுடன் வந்திருந்தனர்.