அன்புள்ள வாக்காளர்களுக்கு... வைகோ எழுதும் கடிதம்

சங்கரன்கோவில்: அன்புள்ள வாக்காளர்களுக்கு... என, உருக்கமான கடிதம் எழுதி, அதை தபால் மூலம் வாக்காளர்களுக்கு அனுப்பி, வைகோ நூதனமான முறையில் பிரசாரம் செய்து வருகிறார். சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் களத்தில், ம.தி.மு.க.,வினர் புது வியூகம் அமைத்து, தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். தேர்தல் பிரசாரங்களில் மாற்று கட்சியினரை வசைபாடுவது கிடையாது. ம.தி.மு.க., இணையதள நண்பர்கள் சார்பில், பொது வாழ்க்கையில் வைகோ கடந்து வந்த பாதை, மக்கள் நலப்போராட்டங்களை தொகுத்து, இன்லேண்ட் லெட்டர் போல் தயாரித்து அச்சிட்டுள்ளனர். நேரடி போஸ்ட் என்ற திட்டப்படி, கவரில், 5 ரூபாய் தபால் தலையை ஒட்டி, பெறுநர், அன்பிற்குரிய வாக்காளர் பெருமக்கள், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி என விலாசம் எழுதி, தபால் நிலையங்களில் சேர்க்கின்றனர். கடிதங்களில் தபால் துறை முத்திரை குத்தப்பட்டு, போஸ்ட்மேன் மூலம் வைகோவின் கடிதங்களை வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யவுள்ளனர். முதற்கட்டமாக, 45 ஆயிரம் கடிதங்கள் அச்சிடப்பட்டுள்ளன.