அமிதாப்பிற்கு மீண்டும் அறுவை சிகிச்சை!

பாலிவுட் நடிகர் அமிதாப்பிற்கு மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாலிவுட் நடிகரும், அகில இந்திய சூப்பர் ஸ்டார் என புகழ்பெற்றவருமான அமிதாப்பச்சன்,69. கடந்த 1982-ம் ஆண்டு ‘கூலி’ எனும் இந்தி திரைப்படத்தில் , சண்டைக்காட்சியில் நடித்த போது இவருக்கு வயிற்றில் பலத்த அடிப்பட்டதில் படு காயமடைந்தார்.

பின்னர் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பின் குணமடைந்தார். பின்னர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் இவருக்கு அதே இடத்தில் தொடர்ந்து வலி ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

இந்நிலையில் கடந்த வாரம் மீண்டும் வயிற்றில் கடுமையாக வலி ஏற்படவே, மும்பை செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப்பின் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தற்போது மீண்டும் அவருக்கு சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வரும் சனிக்கிழமையன்று அவருக்கு மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை நடக்கவுள்ளதாக , தெரிகிறது. இதை அறிந்த அவரது ரசிகர்கள் டீவிட்டர் வாயிலாக அவர் குணமடைய வாழ்த்துக்களை குவிக்கின்றனர்.