புதுக்கடை :அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டை கண்டித்தும், கூடன்குளம் அணுமின் நிலையத்தை உடனே திறக்க கேட்டும் காங்., சார்பில் முன்சிறை ஜங்ஷனில் இருந்து பாடைகட்டி கொள்ளி குடத்துடன் பேரணியாக வந்து புதுக்கடையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழகத்தில் தற்போது 12 மணி நேரம் வரை மின்வெட்டு நிலவி வருகிறது. இந்த மின்வெட்டால் பள்ளி மாணவ, மாணவியர் தேர்வு நேரத்தில் படிக்க முடியாமலும், சிறுதொழில் செய்யும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்தும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மின்சாரத்தை நம்பி மிக்சி, கிரைண்டரில் அரைக்கும் பெண்கள் தற்போது நிலவிவரும் மின்வெட்டால் மிக்சி, கிரைண்டரை இயக்க முடியாத நிலையில் உள்ளனர். இந்த மின்வெட்டுக்கு விடிவுகாலம் பிறக்க கூடன்குளம் அணுமின் நிலையத்தை உடனே திறக்க வேண்டியது அவசியம்.
அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டை கண்டித்தும், கூடன்குளம் அணுமின் நிலையத்தை உடனே திறக்க கேட்டும் காங்., சார்பில் முன்சிறை ஜங்ஷனில் இருந்து மின்வாரியத்திற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் வகையில் பாடை கட்டியும், கொள்ளியும் குடமும் எடுத்து கண்டன பேரணி நடந்தது.
பேரணிக்கு ஜாண்ஜேக்கப் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். முன்சிறை கிழக்கு வட்டார காங்., தலைவர் விஜயஆனந்த், மேற்கு வட்டார தலைவர் பால்ராஜ், கிள்ளியூர் வட்டார தலைவர் டைட்டஸ் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை பிரின்ஸ் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். கொள்ளி, குடத்தை புதுக்கடை காங்., தலைவர் துரை தூக்கி வந்தார்.
காங்., மகளிரணியினர் ஒப்பாரி வைத்து அழுதனர். மாவட்ட இளைஞர் காங்., தலைவர் குமார், மாவட்ட முன்னாள் இளைஞர் காங்., தலைவர்கள் ராஜேஷ்குமார், ரமேஷ்குமார், கருங்கல் நகர இளைஞர் காங்., தலைவர் குமரேசன், கிள்ளியூர் தொகுதி காங்., இளைஞரணி செயலாளர் ரகுபதி, விளாத்துறை நகர தலைவர் மரியதாஸ், முன்சிறை பஞ்., யூனியன் துணைத்தலைவர் குமாரதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ., பொன்.விஜயராகவன், மாவட்ட மருத்துவ காங்., தலைவர் டாக்டர் பினுலால் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இப்போராட்டத்தால் முன்சிறை - புதுக்கடை ரோட்டில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. தொடர்ந்து புதுக்கடை ஜங்ஷனில் மின்வாரியத்தை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
