அறிவியல் ஆயிரம்

சீசன் இல்லாத பழம்


சீசன் இல்லாமல், ஆண்டு முழுவதும் எப்போதும் கிடைக்கும் பழங்களுள் ஒன்றாக, கொய்யாப்பழம் உள்ளது. ஆண்டுதோறும் கிடைப்பதால் இதன் அருமை தெரிவதில்லை. வட மொழியில் "பீஜம்' என்றால் விதை என அர்த்தம். கொய்யாப்பழத்தினுள் விதைகள் அதிகமாக இருப்பதால், சமஸ்கிருதத்தில் இதனை "பீஜபுரபழம்' என்கின்றனர். இந்தியில் இது அம்ருத் என்றும், ஜாம் எனவும் அழைக்கப்படுகிறது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கொய்யா விளைந்தாலும், லிங்கவாடி, கார்சேரி, அழகர்கோவில், ஆயக்குடி ஆகிய இடங்களில் விளையும் கொய்யாப் பழங்கள் சுவை மிகுந்ததாக உள்ளன. மழைக்காலத்தில் ஏற்படும் சளியை விரட்டும் தன்மையும் கொய்யாப்பழத்திற்கு உள்ளது. மலச்சிக்கலுக்கு சிறந்த நிவாரணியாக கொய்யாப் பழத்தை இயற்கை மருத்துவம் பரிந்துரை செய்கிறது.


தகவல் சுரங்கம்


பனிமழையின் நகரம்


வட மாநிலங்களில், கோடைவாசஸ்தலங்களில் நவம்பரில் பனிச்சாரல் துவங்கி விடும். டிசம்பரில் பனி 2 அடி வரை இருக்கும். அப்போது உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவர். ஜனவரி, பிப்ரவரியில் பனியின் உயரம் 10 அடி இருக்கும். அப்போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தான் அதிகம் வருவர். இந்தியாவில் காஷ்மீர் பிரச்னையால், சுற்றுலாப் பயணிகள் போகத் தயங்கும் கோடை வாசஸ்தல மாக குல்மார்க் உள்ளது. ஸ்ரீநகரில் இருந்து 40 கி.மீ., தொலைவில் இது உள்ளது. ஸ்ரீநகரில் இருந்து ஒரு நாள் பயணமாகச் சென்று வரலாம். குல்மார்க் பனிப்பூங்காவுக்கு செல்பவர்கள் அதற்கென்று பிரத்யேகமாக உள்ள ஷூவையும், ஜெர்கின் உடையையும் கட்டாயம் அணிய வேண்டும். குல்மார்க்கில் பனிகளுக்கு நடுவில் தான் உணவு விடுதிகள் இருக்கும். குல்மார்க்கின் மலையடிவாரம் டேங்மார்க் என அழைக்கப் படுகிறது. டேங்மார்க்கில் இருந்து 20 கி.மீ., தொலைவில் குல்மார்க் உள்ளது.