தேடல்

அள்ளப்படாத குப்பை கழிவால் தொற்றுநோய் பரவும் அபாயம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தினசரி மார்க்கெட் அருகே சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளால், அப்பகுதியில் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

கிருஷ்ணகிரி சந்தைப்பேட்டை பகுதியில் தினசரி மார்க்கெட் உள்ளது. இங்கு சுமார் 30க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. இங்கு வீணாகும் காய்கறி கழிவுகளை வியாபாரிகள் மார்க்கெட் அருகேகொட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இவ்வாறு கொட்டப்படும் அழுகிய காய்கறிகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன் அதில் இருந்து பூச்சிகள் உற்பத்தி ஆவதுடன், ஈக்கள் போன்றவை அதிகளவில் மொய்க்கும் நிலை உள்ளது.

அப்பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் கடைகளில் அதிகளவில் ஈக்கள் மொய்த்து வருகின்றன. இதனால், பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. காய்கறிகடைகளில் இருந்து திறந்த வெளியில் அழுகிய காய்கறி மற்றும் கழிவு பொருட்களை வியாபாரிகள் கொட்டுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.