தஞ்சாவூர்: அ.தி.மு.க.,வில் என்றைக்கும் துரோகிகளுக்கு இடமில்லை.
கட்சிக்கு துரோகம் இழைத்தால், அவர்களை தூக்கியெறிய முதல்வர் ஜெ., தயக்க
மாட்டார், என அமைச்சர் வைத்திலிங்கம் பேசினார்.தமிழக முதல்வரும்,
அ.தி.மு.க., பொதுச்செயலாளருமான ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, தஞ்சை நகர
அ.தி.மு.க., சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. நகர செயலாளர் பண்டரிநாதன்
தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் கோபால் வரவேற்றார். தஞ்சை
தெற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், தமிழக வீட்டு வசதி மற்றும்
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான வைத்திலிங்கம் பேசியதாவது:
தமிழக முதல்வர் ஜெயலலிதா எந்த பிரச்னையிலும் துணிந்து முடிவெடுக்க கூடிய
ஆற்றல் படைத்தவராக திகழ்கிறார். தன்னுடைய பிறந்தநாளை ஏழை, எளிய மக்களுக்கு
பயன்படும் வகையில் கொண்டாடி வருகிறார். அ.தி.மு.க., துவங்கியது முதல்,
இதுவரை ஆறு முறை தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சியை பிடித்துள்ளது.
தற்போது மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பை ஜெயலலிதா
ஏற்றுக்கொண்டுள்ளார். மக்கள் வாழ்க்கைத்தரம் உயர, பல்வேறு நலத்திட்டங்களை
அடுக்கடுக்காக முதல்வர் அளித்துள்ளார். இந்தியாவில் எந்தவொரு மாநில அரசும்
செய்யாத, செய்ய முடியாத அளவுக்கு சாதனைகளை படைத்து வருகிறார்.புயல் நிவாரண நிதியுதவியை மத்திய அரசு கிள்ளிக்கூட கொடுக்க முன்வரவில்லை.
ஆனால், தாயுள்ளத்துடன் தமிழக முதல்வர் அவர்களுக்காக அள்ளி, அள்ளி கொடுத்து
வருகிறார். அ.தி.மு.க.,வில் என்றைக்குமே துரோகிகளுக்கு இடமில்லை. துரோகம்
இழைத்தால் கட்சியை விட்டு தூக்கியெறியவும் தயங்க மாட்டார். துரோகிகளுக்கு
சிம்மசொப்பனமாகவும், மக்களுக்கு பாதுகாவலராகவும் முதல்வர் ஜெயலலிதா விளங்கி
வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.அமைப்புசாரா ஓட்டுனர் அணி துணைச்செயலாளர் நாகராஜன்,
நகர துணைச்செயலாளர் சண்முகபிரபு, நகர பொருளாளர் அன்பழகன், மாவட்ட
அ.தி.மு.க., பிரதிநிதிகள் காமாட்சி, ஞானம், ராஜ்மோகன், வட்டச்செயலாளர்
ராஜா, கவுன்சிலர் அனிதா ராணி, ஒன்றிய செயலாளர் துரை வீரணன், பேச்சாளர்
மாரிமுத்து ஆகியோர் பேசினர்.கூட்டத்தில் பிரிவு செயலாளர்கள் சேகர்,
ராஜேஸ்வரன், காந்தி, புண்ணியமூர்த்தி, துரை கருணாநிதி, நகராட்சி
துணைத்தலைவர் மணிகண்டன், தொகுதி இணைச்செயலாளர்கள் சிங்காரவேலு, பாலை ரவி,
மாவட்ட நிர்வாகிகள் அறிவுடைநம்பி, கணபதி, துரை, மோகன், இலக்கிய அணி சுரேஷ்,
ஏழுப்பட்டி பாலு, ராஜா சுப்பிரமணியன் மற்றும் பலர் பங்கேற்றனர்.ஏழை,
எளியோர் 500 பேருக்கு வேட்டி, சேலை, மூன்று தையல் இயந்திரங்கள், நான்கு
அயர்ன்பாக்ஸ், மூன்று சக்கர வாகனம் ஆகியவற்றை அமைச்சர் வைத்திலிங்கம்
வழங்கினார். முடிவில் நகர ஜெ., பேரவை துணைத்தலைவர் சுவாமிநாதன் நன்றி
கூறினார்.
