ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் மீது தாக்குதல்

நாகர்கோவில் :குலசேகரம் அருகே ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி மீது தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

நாகர்கோவில் ராமன்புதூரை சேர்ந்தவர் டாக்டர் சார்லஸ் தனராஜ். இவர் குலசேகரம் அருகே உள்ள குட்டக்குழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஒரு கும்பல் பணியில் இருந்த டாக்டரை தாக்கியுள்ளது. இதில் காயமடைந்த அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து டாக்டர் சார்லஸ் தனராஜ் கூறியதாவது: சம்பவத்தன்று இரவு நிறைமாத கற்பிணி ஒருவர் பிரசவத்திற்காக உறவினர்களுடன் வந்தார். நர்சிடம் சென்று சீட்டு வாங்கி வர கூறினேன். திடீரென அவருடன் வந்த சிலர் குடிபோதையில் என்னை தாக்கினர். மேலும் அங்கிருந்த பொருட்களையும் சூறையாடினர். இது குறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனருக்கு தகவல் தெரிவித்தேன். எனது காயத்திற்காக இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளேன் என கூறினார்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையில் பணியில் இருந்த டாக்டரை கும்பல் தாக்கியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.