இந்திய கால் சென்டர்கள் மூலம் நிதி மோசடி: அமெரிக்க தனியார் நிறுவன உரிமையாளர் மீது வழக்கு

நியூயார்க்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் செயல்பட்டு வந்த சில தனியார் நிறுவனங்கள், இந்தியாவில் உள்ள கால் சென்டர்கள் மூலம், ஐந்து மில்லியன் டாலர் அளவிற்கு வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில், குறைந்த வட்டிக்கு ஆசைப்பட்டு குறுகிய காலக் கடன் வாங்குபவர்கள் அதிகம். இவர்களுக்காக பல்வேறு சிறு, குறு நிதி நிறுவனங்கள், ஆன்-லைனில் இந்த சேவையை வழங்குகின்றன. இந்தக் கடனுக்கு, வாடிக்கையாளர் தான் பணிபுரியும் இடம், சம்பளம் பற்றிய ஆதாரம் இவற்றை சமர்ப்பித்தால் போதுமானது. இதில், ஆன்-லைன் வர்த்தகத்தில் சில நிறுவனங்கள் இந்தத் தகவல்களைக் கூட கேட்பதில்லை. இவ்வாறு அளிக்கப்படும் கடன்களை சிலநிறுவனங்கள், அயலாக்க (அவுட்சோர்சிங்) பணிகள் மூலம் வசூலிக்கின்றன. இந்த அயலாக்கப் பணிகள் இந்தியாவில் உள்ள கால் சென்டர்களுக்கும் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், கலிபோர்னியாவின், வில்லா பார்க் பகுதியில் இயங்கி வந்த, அமெரிக்கன் கிரெடிட் க்ரன்ச்சர்ஸ், மற்றும் ஈபீஸ் எல்.எல்.சி., ஆகிய தனியார் நிறுவனங்கள், இதுபோன்ற கடன் வசூலில் ஈடுபட்டு இருந்தன. இவை சில பணிகளை இந்தியாவில் உள்ள கால் சென்டர்களுக்கு அயலாக்கப் பணிகளாகவும் அளித்திருந்தன. இந்நிலையில் கடந்த 2010 ஜனவரி முதல், இந்த நிறுவனங்களைச் சார்ந்த 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு இந்திய கால்சென்டர்களில் இருந்து இரண்டு கோடி அழைப்புகள் சென்று உள்ளன. வாடிக்கையாளருக்குச்சம்பந்தமே இல்லாத கடன்களை எல்லாம் கட்டச் சொல்லியும், அவர்கள் மறுத்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, மிரட்டியும் இந்திய கால் சென்டர்களில் இருந்து அழைப்புகள் சென்றுள்ளன. இவ்வகையில், கால் சென்டர்கள் மூலம் வாடிக்கையாளர்கள் மிரட்ட பட்டு, 300 டாலர் முதல் இரண்டாயிரம் டாலர்கள் வரையில் கட்டணம் செலுத்தக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். மொத்தத்தில் கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் ஐந்து மில்லியன் டாலர் நிதி மோசடி செய்யபட்டுள்ளது. இதுகுறித்து, ஈபீஸ் நிறுவன உரிமையாளர் வாரங் தாக்கர் என்பவர் மீது அமெரிக்க மத்திய வர்த்தக கமிஷன் வழக்கு தொடுத்து உள்ளது. இந்நிறுவனங்கள் தற்காலிகமாக இழுத்து மூடப்பட்டுள்ளன.