நொய்டா:
இந்தியாவில் முதன்முதலாக நடந்த பார்முலா-1 கார் பந்தயம் இமாலய வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஊழல் மிகுந்த காமன்வெல்த் போட்டியால் கிடைத்த அவப்பெயர் நீங்கியுள்ளது.கடந்த
ஆண்டு டில்லியில் காமன்வெல்த் போட்டி நடந்தது. இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 70 ஆயிரம் கோடி ரூபாயில் பெருமளவு ஊழல் நடந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ., உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் விசாரணை நடத்தி வருவதால், உலகளவில் இந்தியாவுக்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டது.
இந்நிலையில் சர்வதேச பார்முலா-1 பந்தயத்தின் 17வது சுற்று, டில்லி அருகே நொய்டாவில் புத்தா சர்வதேச சர்கியூட் மைதானத்தில் நடந்தது. பயிற்சி போட்டியின் போது டிராக்கில் நாய் குறுக்கிட்டது, பத்திரிகையாளர் சந்திப்பின் போது கரன்ட் கட் போன்றவை சிறிய அளவில் பிரச்னை ஏற்படுத்தின. ஆனாலும், நேற்று முன் தினம் நடந்த பைனலில் எவ்வித சிக்கலும் ஏற்படவில்லை. உலகமே வியக்கும் வகையில் பந்தயம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
வியக்கத்தக்க பந்தய வசதிகள், மயங்கச்செய்த விருந்தோம்பல், தீவிர ஆர்வத்துடன் மைதானத்தில் திரண்ட 1 லட்சம் ரசிகர்கள் போன்றவை இந்திய பார்முலா-1 பந்தயத்தை இமாலய வெற்றி பெற செய்துள்ளது. 350 கி.மீ., வேகத்தில் கார்கள் சீறிப்பாய்ந்த காட்சியை கண்ட ரசிகர்கள், அந்த உற்சாகத்தில் இருந்து இன்னும் மீளவில்லை.
பயந்து கொண்டிருந்தேன்:
பந்தயத்தில் பங்கேற்ற அனைத்து வீரர்களும், மீண்டும் இங்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர். போட்டி குறித்து பார்முலா-1 தலைவர் எக்லஸ்டோன் கூறுகையில், கட்டுமானப்பணிகள் கடைசி நிமிடம் வரை நடந்து கொண்டு இருந்தது. இதனால் போட்டி எப்படி நடக்கும் என்று பயந்து கொண்டிருந்தேன். கடைசியில் எல்லோரும் சேர்ந்து சிறப்பானதாக மாற்றிவிட்டனர், என்றார்.
வித்தியாசமாக உள்ளது:
இந்த பந்தயத்தில் முதலிடம் பெற்று கோப்பை வென்ற ஜெர்மனியன் செபாஸ்டியன் வெட்டல் கூறுகையில், இந்தியா மிகவும் என்னைக் கவர்ந்தது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து கேள்விப்பட்டதை விட, இங்கு முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. நமது கண்களையும், காதுகளையும் நன்றாக திறந்து இந்தியாவைப் பார்த்தால், ஏகப்பட்ட விஷயங்களை கற்றுக்கொள்ளலாம், என்றார்.
----
