தேடல்

இலவச திருமணத்துக்கு ஸ்ரீரங்கத்திலிருந்து 50 ஜோடி பயணம்

திருச்சி: தமிழக அரசு சார்பில் திருவேற்காட்டில் நடக்கும் இலவச திருமணத்துக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து 50 ஜோடிகள், தங்களின் உறவினர்களுடன் பஸ்களில் புறப்பட்டு சென்றனர்.
சென்னை திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் இன்று (18ம் தேதி) 1006 ஜோடிகளுக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதாஇலவச திருமணம் நடத்தி வைக்கிறார்.
இதற்காக, திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள திருச்சியில் 50 ஜோடிகள், புதுக்கோட்டையில் 15, கரூரில் 18, பெரம்பலூரில் 10, அரியலூரில் ஏழு என மொத்தம் 100 ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
திருச்சியை சேர்ந்த ஜோடிகள் மற்றும் அவரது உறவினர்கள் என மொத்தம் 500 பேர் நேற்று காலை 10 அரசு பஸ்களில், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன் புறப்பட்டனர். அமைச்சர் சிவபதி கொடியசைத்து அவர்களை வழியனுப்பி வைத்தார். கலெக்டர் ஜெயஸ்ரீ, எம்.எல்.ஏ., பரஞ்ஜோதி, மேயர் ஜெயா, இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் இளம்பரிதி, ஸ்ரீரங்கம் கோவில் இணை கமிஷனர் கல்யாணி, உள்ளிட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
மற்ற மாவட்டங்களை சேர்ந்த ஜோடிகள், அவரவர்களின் மாவட்ட மையப் பகுதியில் இருந்து நேற்று அரசு பஸ்களில் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.