தேடல்

இது உங்கள் இடம்

திருந்தமாட்டீரா திருக்குவளையாரே?
எஸ்.தனராஜ், மதுரையிலிருந்து எழுதுகிறார்: கடந்த லோக்சபா தேர்தலில், 23 எம்.பி.,க்களை பெற்றதாலும், கடந்த சட்டசபை தேர்தலில், 22 எம்.எல்.ஏ.,க்களை பெற்றதாலும், ஒரு சில ராஜ்யசபை எம்.பி.,க்களை வைத்திருப்பதாலும், ஜனாதிபதி தேர்தலில், தங்களது ஆதரவை தரும்படி, பிரதமரும், சோனியாவும் கருணாநிதியுடன் போனில் பேசுகின்றனர்.இது தெரியாத கருணாநிதி, இந்தியாவே தன்னை உற்று நோக்குவதாக நினைத்து, வார்த்தை ஜாலம் காட்டுகிறார். சமீபத்தில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பற்றி, கருணாநிதி அளித்த பேட்டி ஒன்றில், கலாம் என்றால் கலகம் என்று சொல்லி இருக்கிறார். கலாமை வைத்து, சிலர் கலகம் செய்கின்றனர் என்று கூறி இருந்தால் கூட பரவாயில்லை.இந்திய மக்கள் அனைவரும் - கருணாநிதியை தவிர - மதிக்கத்தக்க ஒருவரை, இப்படி அநாகரிகமாக பேசியவரைத் தான், தமிழகம், ஐந்து முறை முதல்வர் பதவியில் அமர்த்தி இருக்கிறது!கருணாநிதி நாக்கில் அவ்வப்போது, திருநள்ளாறு சனீஸ்வரன் உட்கார்ந்து கொள்வார்; அவர் திருந்த மாட்டார் என, முன்னாள் சபாநாயகர் காளிமுத்து,அடிக்கடி கூறுவார்.காளிமுத்து மறைந்தாலும், அவர் சொன்ன வார்த்தை, கருணாநிதியின் பேச்சால், இன்றும் உயிர் பெற்றுக் கொண்டு தான் இருக்கிறது!

ஏலத்தில் விடலாமே!
எஸ்.ராமன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: தேர்தல்களில் பணபலம் அதிகரித்துள்ளது, மிகவும் கவலை அளிக்கிறது. அதை கட்டுப்படுத்த முடியவில்லை. என் பணிக்காலத்தில், பண பலத்தைக் கட்டுப்படுத்துவதுபெரும் சவாலாக இருந்தது என, முந்தைய தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி, பதவி ஓய்வு பெறும் தறுவாயில், தன் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளார். இது, இந்தியர்களுக்கு கவலை அளிக்கும் ஒரு செய்தி.தேர்தலின் போது - இடைத்தேர்தல் திருவிழாக்கள் உட்பட - பிற கட்சிகள் கொடுக்கும் பணத்தைப் பெற்றுக் கொண்டு, எங்களுக்கு வாக்களியுங்கள்... என்று, கட்சித் தலைவர்கள், வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர்.தலைவர்கள் சொல்வதை வேத வாக்காக நினைத்து, அதைப் பின்பற்றும் பாமர மக்களுக்கு, இது ஒரு தவறான வழிகாட்டுதலாக அமைந்து விடுகிறது. ஓட்டுக்குப் பணம் வாங்குவதில், எந்தத் தவறுமில்லை என்ற எண்ணம், மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விடுவதற்கு, இம்மாதிரி பொறுப்பற்ற பேச்சுகள் வித்திடுகின்றன.இப்படிப்பட்ட பேச்சுகளை தடை செய்வதற்கும், அவற்றை தேர்தல் விதிமீறல்களாகக் கருதுவதற்கும், தேர்தல் கமிஷன் முயற்சிகள் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.வேட்பாளர்கள், தங்கள் தகுதியின் அடிப்படையில், ஓட்டுகளைப் பெறுவதற்குப் பதிலாக, பணத்தையும், பொருளையும் கொடுத்து, ஓட்டுகள் வாங்கப்படும் கலாசாரம், தடையின்றி விரிவடைந்து வருகிறது.கொடுக்கும் கையும், வாங்கிய கையும் நீண்டு கொண்டே தான் இருக்கும். அதைத் தடுத்து நிறுத்த முடியாத சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்திய ஜனநாயக அமைப்பு, இந்த வியாபாரத்தை ஏற்றுக் கொண்டு விட்டதாகவே கருதலாம். ஆனால், இதில் சில குறைபாடுகள் உள்ளன. இந்த முறையில், சில வாக்காளர்கள் பெரும் பயனடைந்தும் மற்றும் சிலருக்குப் பயன் கிட்டாமல் போகவும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால், சமூகத்தில், சமநீதி பாதிக்கப்படுகிறது.ஓட்டுகளைப் பணம் கொடுத்து வாங்கும் முறைகேடுகளைத் தடுக்க முடியவில்லையென்ற, குரேஷியின் வாக்குமூலம், இந்தத் தருணத்தில் நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஓட்டுகள் வியாபாரப் பொருளாக்கப்படும் சந்தையான தேர்தல்களை நடத்துவதற்கு, ஏராளமான பணம் அரசால் செலவழிக்கப்படுகிறது.இந்தச் செலவுகளைக் குறைக்க, ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி போல், மக்கள் பிரதிநிதி பதவிகள் ஏலம் விடப்படும் முறையை அமல்படுத்தலாம். இதனால், அந்தந்தத் தொகுதி மக்களுக்கு, ஏலத்தொகை சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டு, சமநீதி நிலைநாட்டப்படும்.ஜனநாயகத்தில் புரையோடிக் கொண்டிருக்கும் சில முறைகேடுகளை ஒழிப்பது கடினமென்றால், அவற்றை சட்டப்படி நியாயப்படுத்தி விடுவது, சுலபமான செயலாகும்.

நம்மாளு தானே குட்டுறது...
என்.சேகு மகதூம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: சேலம் அங்கம்மாள் காலனி அபகரிப்பு வழக்கில் சிக்கிய வீரபாண்டி ஆறுமுகம், குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட கருணாநிதி, குட்டக் குட்ட குனிவது முட்டாள்தனம்; குனியக் குனியக் குட்டுவது அதைவிட முட்டாள்தனம் என, கிராமங்களில் சொல்வதுண்டு என்று கூறியுள்ளார்.வினை விதைப்பவன் வினை அறுப்பான்; தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்றும் கூட சொல்வர்.இவர்கள் சார்ந்திருக்கும் மத்திய அரசு, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவை, ஒரு வருடம் சிறையில் தள்ளியது. கனிமொழி கூட, ஆறு மாதம்திகார் சிறையிலிருந்தார். அப்போது, செயற்குழுவைக் கூட்டி கண்டனம் தெரிவித்தாரா?மகளைப் பார்த்து, கண்ணீர் வரும் அளவுக்கு குட்டுவது வலித்ததே, அப்போது கண்டனம் தெரிவித்தாரா? இல்லை, அமைச்சரவையிலிருந்து வெளியேறினாரா? ஆனால், சுயநலவாதியாக, இப்போதும் காங்கிரசையும், மத்திய அரசையும் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்.மாநில அரசு குட்டினால் தவறு; தான் சார்ந்திருக்கும் மத்திய அரசு குட்டினால் தவறில்லையா? ஒரு விஷயத்தில், கருணாநிதி தன்னை சமாதானம் செய்யலாம்... மாற்று நாட்டுக்காரன் குட்டவில்லை... நம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தானே குட்டுகிறது என்று!

விளையாடாதீர் எதிர்காலத்துடன்!
அ.கிருஷ்ணன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில், 71 இன்ஜினியரிங் கல்லூரிகள், அரைகுறை வசதிகளுடன் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய குறைபாடுள்ள கல்லூரிகளுக்கு, எப்படி அங்கீகாரம் வழங்கப்பட்டது? அக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்காலம், கேள்விக்குறியாகும் நிலை ஏற்படுமல்லவா?புதிதாக ஆரம்பிக்கும் கல்லூரிகளுக்கு, நிபந்தனைகளின் அடிப்படையில், அங்கீகாரம் வழங்கப்படும் நிலை, நியாயத்திற்குப் புறம்பானது.பெற்றோர், பலவித சிரமங்களுக்கிடையில், கடன்பட்டாவது, தங்கள் பிள்ளைகளை, பொறியியல் கல்லூரிகளில் சேர்த்து விடுகின்றனர். கல்லூரிகளுக்கு, அங்கீகாரம்இல்லை என்று அறியும் போது, பெற்றோர் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல.எப்படி இருந்தாலும், எல்லா நிலைகளும் முழுமை பெறாத இன்ஜினியர் கல்லூரிகளுக்கு, எக்காரணத்தை கொண்டும், அங்கீகாரம் தரக்கூடாது என்ற கண்டிப்பான செயல் திட்டம் வேண்டும்.மாணவர்களின் எதிர்கால வாழ்வான கல்வித் திட்டத்தில், எவரும் விளையாடக் கூடாது!

யாரைக் காப்பாற்ற டெசோ?
வி.எஸ்.ராமு, திண்டுக்கலிலிருந்து எழுதுகிறார்: 1985 - 1986க்கு பின், மீண்டும், டெசோவை (தமிழீழ ஆதரவு அமைப்பு) தி.மு.க., தலைமை கையில் எடுத்திருக்கிறது. ஈழத்தில், எல்லாம் நடந்து முடிந்து விட்டது. இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்தனர் என்பது போய், இன்று, இலங்கை முகாம்களில் தமிழர்கள் வதங்கிக் கொண்டிருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும்.தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில், சிங்களர்களை குடியமர்த்துகின்றனர். தமிழக போராளிகளின் கல்லறைகள் கூட சமப்படுத்தப்பட்டு, உருமாற்றப்பட்டு விட்டன.இலங்கை அரசு,ரசாயன குண்டுகளை கொத்துக் கொத்தாகவீசி,தமிழர்களை கொன்று குவித்ததையும், ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதையும் பார்த்து, உலக நாடுகள் திடுக்கிட்டன.தமிழினத் தலைவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட கருணாநிதி, போரின் போதும், போர் முடித்த பின்பும், மவுனமாக இருந்ததற்கான காரணம் உலகறியும்.இலங்கையில், தமிழர்களுக்கு நிலம் வேண்டுமென, கருணாநிதி கேட்கிறார்; அங்கு வாழ, தமிழ் இனம் வேண்டுமே?தமிழினமே சாம்பலாக, மண்ணோடு மண்ணாய் மடிந்துவிட்டது. தப்பியவர்களில் பலர், தம் உறவுகளை இழந்து, பொருட்களை இழந்து, ஊனமாக, நடமாடும் பிணமாய் வாழ்கின்றனர்.இந்நிலையில், மீண்டும், டெசோவை எடுக்கும் போது, சிதறிக் கிடக்கும் தமிழர்களைத் தேடி, சிங்கள அரசு, கோபத்துடன் வேட்டையாடும். தலைவர் அழைக்கிறார் என்பதற்காக, தொண்டர்கள் கூடலாம்; ஆனால், உண்மையான தமிழீழ ஆதரவாளர்கள், ஒதுங்கித் தான் நிற்பர்.காலம் கடந்த பின், கருணாநிதி, டெசோவை கையில் எடுத்தது, யாரை திருப்திப்படுத்த? எதிர்க்கால அரசியலுக்கு இது தேவைப்படுகிறதா? இவர்களால், தமிழீழம் மலர வைக்க முடியுமா என்று, தொண்டர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.குளத்தில் தண்ணீர் வற்றும் போது, மீனைக் காப்பாற்ற, தண்ணீர் பாய்ச்சாமல் (பதவி சுகத்துக்காக) விட்டு விட்டு, செத்து கருவாடான பின், நீர் பாய்ச்ச முயற்சிக்கலாமா?டெசோ தி.மு.க.,வை வளர்க்கப் போகிறதா? இலங்கைத் தமிழர்களின் நிலையை உயர்த்தப் போகிறதா? காத்திருப்போம்!

இது யார் குற்றம்?
அ.பன்னீர்செல்வம், மதுரையிலிருந்து எழுதுகிறார்:மதுரை மாவட்டம், கள்ளிக்குடி மாணவியருக்கு, கல்வி உதவித்தொகை இல்லை என்ற செய்தி கண்டு,வேதனையடைந்தேன். அரசு, பல்வேறு நலத்திட்டங்களை அறிவிக்கிறது. அத்திட்டங்களை நிறைவேற்றுவதற்காகவே, ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஊழியர்கள் சரிவர பணி செய்கின்றனரா என்பதை கண்காணிக்க, அதிகாரிகள் உள்ளனர்.அரசியல்வாதிகள்,அரசு ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோர், தாங்கள், மக்களுக்கு பணி செய்ய நியமிக்கப்பட்டவர்கள் என்பதை முற்றிலும் மறந்து, எஜமானர்கள் என்ற ரீதியில் செயல்படுகின்றனர்.ஆதிதிராவிட மாணவியருக்கு, ஓர் ஆண்டுக்கான கல்வி ஊக்குவிப்புத் தொகையாக, 500 மற்றும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இத்தொகை, ஆயிரக்கணக்கில் மாதச் சம்பளம் பெறும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு வேண்டுமானால், மிகச் சாதாரணத் தொகையாக இருக்கலாம். ஆனால், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவியரின் ஏழைப் பெற்றோருக்கு, அது மிகப்பெரிய உதவித் தொகையாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ளாத ஆசிரியர்களும், அதிகாரிகளும் பணியாற்றுவது, இப்பகுதி மக்களின் துரதிருஷ்டமே! இதேபோல், தரம் உயர்த்தப்பட்ட எட்டு பள்ளிகளில், மூன்றாண்டு காலமாக, 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, சத்துணவு வழங்கப்படவில்லைஎன்ற செய்தி, தினமலர் நாளிதழில் வெளிவந்த பின்னரே, நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது, மாவட்டத்தில், மற்ற 12 ஒன்றியங்களிலும் வழங்கப்பட்ட கல்வி ஊக்கத்தொகை, கள்ளிக்குடி ஒன்றியத்தில் மட்டும் வழங்கப்படவில்லை என்றால், இது யார் குற்றம்?

அரக்கர்களைவீழ்த்த முயலுங்கள்!
நா.மு.நாச்சியப்பன், காரைக்குடியிலிருந்து எழுதுகிறார்:மோடிக்கு, நிதிஷ் கண்டிப்பான பதில் சொல்லி இருக்கிறார். இந்தியாவில் உள்ள உன்னதமான சில முதல்வர்களுள், மோடியும், நிதிசும் பெருமைக்குரியவர்கள்; விவரமானவர்கள்; பக்குவமானவர்கள். இவர்கள், மலிவு விலை அரசியல்வாதிகள் அல்ல.தங்களைக் கபளீகரம் செய்ய, எப்போதும் கிங்கரர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்பதை, இருவரும் உணர வேண்டும். இந்தியா, எல்லா விதமான வேறுபாடுகளும், பெருமையும், புகழும் உடைய மாபெரும் நாடு. எனவே, சுயநலமோ, குறுகிய பார்வையோ, இருவரிடமும் வேண்டாம். லாலுவை நினைத்தால், நிதிசும், சோனியாவை நினைத்தால், மோடியும் தவற மாட்டார்கள்.ஒன்றிணைந்து, பல அரக்கர்களை வீழ்த்த திட்டமிடுங்கள்; வீழ்ந்து விடாதீர்கள்!

தொடக்க கல்வி அதிரடி மாற்றம் தேவை!
ஆர்.ரமணன், நத்தத்திலிருந்து எழுதுகிறார்: பல்வேறு மாற்றங்களை ஏற்றுக் கொண்டும், தன்னைத் தானே புதுப்பித்துக் கொண்டும், கற்பித்தல் நடக்கவில்லை எனில், அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு, வளமான எதிர்காலம் இருக்காது.தொடக்கக் கல்வித் துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், அவ்வப்போது, தலைமையாசிரியர்கள் கூட்டம்நடக்கிறது. இந்தக் கூட்டத்திலேயே,ஆண்டின் பல நாட்களை,தலைமை ஆசிரியர்கள் கழித்துவிடுகின்றனர்.தகவல்கள் பரிமாற்றம், கருத்துக் கேட்பு போன்ற பரிமாற்றங்கள் விரைந்து நடக்க,தொடக்கப் பள்ளிகளுக்கு, இணைய வசதியுடன் கம்ப்யூட்டர்வழங்கப்பட வேண்டும்.இதன்மூலம், அடிக்கடி கூட்டம் நடத்தப்படுவது குறையும். தகவல் பரிமாற்றம் விரைவில் நடக்கும்; அதோடு, நேர விரயமும் தவிர்க்கப்படும்.ஒன்று முதல், ஐந்து வரை உள்ள வகுப்புகளுக்கு,கற்றல், கற்பித்தல், துணைக் கருவிகள் பெட்டி, அனைத்துப் பாடத்திற்கும் வழங்க வேண்டும்.பாடம் தொடர்பான, சிடிக்கள் அனைத்துப் பாடத்திற்கும் வழங்க வேண்டும். கல்வி ஒளிபரப்பைக் கண்டு பயன்பெற, ஏற்பாடு செய்ய வேண்டும்.அரசின், விலையில்லா பொருட்களான காலணி, சீருடைகள், பாடநூல், நோட்டுகள், அட்லஸ், கலர்பென்சில், புத்தகப்பை உள்ளிட்டவற்றை, ஜூன், ஜூலை மாதத்திற்குள் கொடுத்துவிட வேண்டும். நடமாடும் அறிவியல் சோதனை வண்டி, மாணவர்கள் தரம் அறிய, ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் தனிக்குழு அமைக்கலாம்.ஆசிரியர் வருகையை, எஸ்.எம்.எஸ்., முறை அல்லது கைவிரல் பதிவு முறையில் கண்காணிக்க வேண்டும்.பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு, ஆண்டுக்கு ஒருமுறை தகுதித் தேர்வு நடத்தி, மதிப்பெண்ணை பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.அதிரடி மாற்றங்கள் வந்தால் தான், ஏற்றம் இருக்கும்.