இது உங்கள் இடம்

8 மணி நேர மின்வெட்டு 4 மணி நேரமாகுமா?
ரா.கிஷ்ணமூர்த்தி, கூடுவாஞ்சேரியிலிருந்து எழுதுகிறார்: இனி, தினமும் எட்டு மணிநேரம் மின்வெட்டு என்ற செய்தியைப் படித்த போது, மனம் மிகவும் வேதனை அடைந்தது. இது, 12 மணி நேரமாகக் கூட அதிகரிக்கப்படலாம். நம்மை ஆண்ட திராவிட கட்சிகளின், 45 ஆண்டு கால அபார சாதனை இது.இந்த திராவிட கட்சிகள், ஆக்கப்பூர்வமாகவும், தொலைநோக்கு திட்டத்துடனும் எதுவும் செய்யவில்லை. இவர்கள் செய்தது எல்லாம், மக்களை எப்படி ஏமாற்றினால், சுலபமாக ஆட்சியில் நிலைத்து நின்று, தலைமுறைக்கும் சொத்து சேர்க்கலாம் என்பது தான்!திராவிட கட்சிகள், எதிர்காலத்தில் மக்கள் தொகை எவ்வளவு பெருகும், அதற்கேற்ப உணவு, சுகாதாரம், கல்வி, இருக்க இடம், மின்சாரம் ஆகிய வசதிகளைப் பெருக்க, தொலைநோக்கு திட்டங்களைத் தீட்டவில்லை. மாறாக, மக்களை ஏமாற்றி ஓட்டு பெறுவதற்காக, முக்கிய திட்டங்களுக்கு செலவிடப்பட வேண்டிய நிதியை, இலவசங்களுக்காக அளித்து, இன்று ஒவ்வொரு குடிமகனின் தலையிலும், மறைமுகமாக கடன் சுமையை ஏற்றி இருக்கின்றன.தற்கால உலகிற்கு, மிக முக்கியமான முதுகெலும்பைப் போன்றது மின்சாரம். மின்சாரம் இல்லையெனில், அனைத்தும் செயலிழந்து போகும். ஆனால், மின்சாரம் தொடர்பாக, எந்தவொரு தொலை நோக்கு திட்டத்தையும், திராவிட கட்சிகள் தீட்டவே இல்லை. தேவையில்லாத திட்டங்களுக்கு, ஊதாரித்தனமாக செலவழித்து வருகின்றன. மின்சாரமில்லாமல் தொழிற்துறையும், விவசாயமும் மிக மோசமாக பாதிப்படைந்துள்ளன. இத்துறைகள் பாதிக்கப்பட்டால், பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்படும்; விலைவாசி விண்ணைமுட்டும். இப்போதாவது, முதல்வர் போர்க்கால அடிப்படையில், கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட நடவடிக்கை எடுத்தால், 8 மணி நேர மின்வெட்டு, 4 மணி நேரமாக குறையும்.அப்படியின்றி, உதவாக்கரை உதயகுமாருக்கு ஆதரவாகச் செயல்பட்டால், மக்களின் கோபம், வரும், லோக்சபா தேர்தலில் ஒலிக்கும்.

வேண்டாமேகுடும்ப அரசியல்!
கு.அருண், புவனகிரியிலிருந்து எழுதுகிறார்: சுதந்திரமடைந்தவுடன், காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட வேண்டும் என, கோரிக்கை வைத்தார் மகாத்மா காந்தி. ஆனால், அதை யாரும் அன்று கண்டுகொள்ளவில்லை.அந்த காங்கிரஸ், நேருவின் மறைவுக்குப் பின், இந்திரா காங்கிரசாக என்று மாறியதோ, அன்றே அது முழுவதும், இந்திராவின் வாரிசுகளுக்கு மட்டுமே என்றாகிவிட்டது.நேரு துவக்கி வைத்த குடும்ப அரசியல், இன்று சோனியாவால் நன்கு வளர்க்கப்பட்டு, உ.பி.,யில் சோனியா, ராகுல், பிரியங்கா என்ற மூவரைத் தொடர்ந்து, சோனியாவின் மாப்பிள்ளை ராபர்ட் வதேரா, அவரது குடும்பத்தினர், ரேஹன் வதேரா, மிரயா வதேரா என, மொத்த குடும்பமுமே தேர்தல் களத்தில் குதித்துவிட்டது. நிச்சயம் இன்னும், 100 ஆண்டுகள், இந்த குடும்பமே, காங்கிரசை ஆளும் என்ற நிலை உருவாகி விட்டது.உ.பி.,யில் இன்று அனல் பறக்கும் பிரசாரம் செய்யும் காங்கிரஸ், அன்று ஆட்சி செய்யும் போது கூட, உ.பி.,யை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முயலவில்லை. இன்று இந்தியாவிலேயே அனைத்து துறைகளிலும் மிகவும் பின்தங்கிய மாநிலமாக, உ.பி., திகழ்கிறது.பீகார் கூட, இன்று, நிதிஷ் குமாரின் தூய்மையான ஆட்சியின் கீழ், நன்கு வளர்ந்து வருகிறது. ஆனால், உ.பி., இன்னும் தவழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.காங்கிரஸ், தன் குடும்ப அரசியலை மையமாகக் கொண்டு செயல்படுவதால் ஒவ்வொரு மாநிலத்திலும், செல்வாக்கை இழந்து, மாநில கட்சிகளின் தோளில் ஏறி தேர்தல்களை சந்திக்க வேண்டியதாகி விட்டது.இந்நிலை நீடித்தால், இனிவரும் லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் தான் வெற்றி பெற முடியும்.குடும்ப அரசியல் என்பது, சில காலங்களுக்கு தான் நீடிக்கும். பின், இன்றைய தி.மு.க.,வைப் போன்று, ஆட்சி, அதிகாரம் பெறுவதில் வாரிசுகளுக்குள் சண்டை, போட்டி வந்து, பின் தானாகவே கட்சி உடைய ஆரம்பித்துவிடும்.குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது, வாக்காளர்களின் கையில் தான் உள்ளது.

ஏன் இப்படி நடக்கிறது?
மா.ஜெயக்கொடி, அனுப்பானடி, மதுரையிலிருந்து எழுதுகிறார்: மாணவர்கள் சமுதாயத்தில், விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருவது, பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.ஒன்பதாவது படிக்கும் மாணவன், ஆசிரியையை கொலை செய்தது; தன்னுடன் படிக்கும் மாணவியை, நான்கு மாணவர்கள், குளிர்பானத்தில் போதை ஏற்றி பலாத்காரம் செய்தது; வீட்டுப்பாடம் செய்யாமல் வந்த மாணவியை, ஆசிரியர், பெற்றோரை அழைத்து வரச்சொன்னதால், அம்மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது... இப்படி பல.விஞ்ஞானம் முன்னேறும் அளவுக்கு, மாணவர்களின் குற்றமும் முன்னேறி வருகிறது.இன்டர்நெட், மொபைல் போன், டிவி போன்றவற்றை, மாணவ, மாணவியர் ஆக்கப்பூர்வமாக, அறிவுப்பூர்வமாக பயன்படுத்துகின்றனரா என்பதை, ஆசிரியர்களும், பெற்றோரும் கண்காணிக்க வேண்டும். குழந்தைகளுக்கு அதிக செல்லம் கொடுத்து, பாக்கெட் மணி அதிகம் கொடுக்கக் கூடாது. நீதி கதைகள், யோகா போன்றவை,
பள்ளிகளில் வாரந்தோறும் நடத்தப்பட வேண்டும்.மதிப்பெண் மட்டும் வாழ்க்கையாக இல்லாமல், அதற்கு மேலே மனிதன் பெற வேண்டிய வேறு சில விஷயங்களையும், ஆசிரியர்கள், மாணவ சமுதாயத்திற்கு பொறுமையுடன் போதிக்க வேண்டும்.
இன்று, கல்வி வியாபாரமாகி, மனிதன் இயந்திரமயமாகி விட்டதால் தான், இந்த குற்றங்கள் நடைபெறுகின்றன என்பதை உணர்ந்து, அரசு இதற்கு தகுந்தவாறு, பாடத் திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும்; அப்போதுதான் குற்றங்கள் குறையும் வாய்ப்பு ஏற்படும்.

பச்சை குத்தலாம்!
ஏ.ஸ்ரீவாஸ், சென்னையிலிருந்து எழுதுகிறார்: இப்பகுதியில், செயின் பறிப்பவர்களுக்கு தண்டனை பற்றி, ஒரு வாசகர் எழுதியிருந்தார். இத்தகைய திருட்டால், விபத்துக்குள்ளானவன் என்ற முறையில், நானும் ஒரு கருத்தை முன் வைக்கிறேன்.
செயின் பறிப்பை குறைப்பதற்கு, இரு வழிகள் உள்ளன... திருட்டு நகைகளை வாங்கி விற்கும், அடகுக் கடைகள் மற்றும் நகைக்கடைகள் மீது, போலீசார் தனி கவனம் செலுத்த வேண்டும். இந்த விவரங்கள், ஏற்கனவே காவல் துறையிடம் இருக்கும்.
இன்னொரு நடவடிக்கை, ஒரு முறைக்கு மேல் பிடிபடும் திருடர்களின் நெற்றியில், கோர்ட் உத்தரவின்படி, சங்கேத பச்சை குத்திவிட வேண்டும்.விபத்து ஏற்படுத்தும் திருட்டை விட, இது மனித உரிமை மீறல் இல்லை!