அட என்னய்யா... நாட்டுக்கு வந்த சோதனை!
பி. மாணிக்கவாசகம், கும்பகோணத்திலிருந்துஎழுதுகிறார்:சொக்கா! அட என்னப்பா, மதுரைக்கு வந்த சோதனை என்று சொல்வது போல, அட என்னப்பா, இந்திய நாட்டுக்கு வந்த சோதனை, ஒரு நல்ல ஆள் கூட, ஜனாதிபதி பதவிக்கு கிடைக்க மாட்டேங்கறாங்களே! எல்லா அரசியல் கட்சிகளும் கிடந்து அல்லாடுகிறதே என்று, பழம்பெரும் ஜனநாயக நாட்டில், குடிமக்களாகிய நம்மை, புலம்ப வைத்து விட்டனர்.ஜனாதிபதி பதவிக்கு, எந்தெந்த துறைகளிலிருந்து, எப்படிப்பட்டவர்களை எல்லாம், செலக்ட் செய்யலாம் என்றால், அரசியல் கட்சிகள், தங்களின் மூத்த (சாதக) அரசியல்வாதிகளையும், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் (ஓய்வு), தனித்திறன் படைத்த நல்லவர்கள், வல்லவர்கள், தலையாட்டி பொம்மைகள், ஆமாம் சாமிகள் என, பட்டியல் நீளும். இதில், இந்த தடவை, ஓய்வு பெற்ற முப்படை தளபதிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆண்டுக்கு ஆண்டு, பாரத ரத்னா விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண் போன்ற விருது பெற்றவர்களை தேர்வு செய்யலாம்.ஆளும் காங்கிரஸ், தனது வேட்பாளரை தெரிவிக்க முடியாமல் திணறுகிறது. பிரணாப் முகர்ஜியை அறிவித்துவிட்டால், கட்சிகளிடம் கட்டப் பஞ்சாயத்து செய்ய, சரியான நாட்டாமை இல்லையென்றாகி விடுகிறது.மன்மோகன் சிங் பேசவே மாட்டார். அப்போ, சிங்கை ஜனாதிபதியாக்கி, பிரணாப்பை பிரதமர் ஆக்கிடலாமே? அதிலும் சிக்கல் தான். சோனியாவின் சொல் கேட்டு, பிரதமர் ஆட வேண்டும். அதற்கு, பிரணாப் சரிப்பட மாட்டார். ஆனால், பிரணாப்பும் வேண்டும்; சிங்கும் வேண்டும்.அப்படியெனில், சிதம்பரத்தை பலிகடா ஆக்கிவிடலாம். எந்தத் துறையிலும் பிரகாசிக்காத, ஆனால், திறமைசாலி எனக் கூறிக் கொள்ளும் சிதம்பரத்தை, ஜனாதிபதி ஆக்கலாம். ஆனால், எதிர்க்கட்சிகள் இதற்கு ஒத்துக் கொள்ளாது.பா.ஜ.,வை பொருத்தவரை, அத்வானியின் பிரதமர் கனவு, மோடியால் பறிபோனது. அடுத்த, சான்ஸ் ஜனாதிபதி பதவி. எனவே, ஓ.கே., என்பார். ஆனால், அவரை முன்மொழிய யாருமில்லை. வாஜ்பாய் ஓ.கே., என்றாலும், அவர் உடல் நிலை, ஓ.கே., இல்லை.லாலு வரலாம். ஆனால், முதல்வராக இருக்கும் போது பீகாரை விற்றவர்; ஜனாதிபதியானால், இந்தியாவையே விற்றுவிடுவார்.இடதுசாரிகள் முட்டி மோதலாம்; ஆனால், பிரதமர் கனவு தான் அவர்களுக்கு...தேவகவுடாவை போட்டுடலாம்; தூங்கிக்கிட்டே காலத்தை கழித்துவிடுவார். கிருஷ்ணாவை போட்டுடலாம்; மயக்கத்துலயே காலத்தை கழித்துவிடுவார்.ஓய்வு பெற்ற முப்படை தளபதிகளில் ஒருவரை, போட்டால் என்ன? கட்டுப்பாடுகள் நிறைந்த ஒரு ஆட்சி கிடைக்கும். நம்ம பசங்களும் பயந்து கெடப்பாங்க!எப்படிப் பார்த்தாலும், இடியாப்ப சிக்கல் தான், இந்திய ஜனாதிபதி தேர்வு.பாவம்யா... சரத் பவார்! ரொம்ப நாளா கிடந்து அல்லாடுறாரு. அவரை ஜனாதிபதி ஆக்கி, அவருக்கு, ரெஸ்ட் கொடுங்க!
இமய மலையையும் விற்றுவிடுவர்...
எஸ்.ஆஷிக், சென்னையிலிருந்து எழுதுகிறார்: இறைவன் சர்வ வியாபி. எங்கும், எதிலும் இருக்கிறார் என்பர் தத்துவ ஞானிகள். இன்று, லஞ்சமும் ஊழலும், அங்கு இங்கு என்றில்லாமல், எங்கும் நிறைந்து காணப்படுகிறது. பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி தலைமையில், குஜராத் கவர்னர் கமலா பேனிவல், 600 கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாய நிலத்தை அபகரித்துள்ளார். அவரை, பதவி நீக்கம் செய்ய வேண்டும் என, ஜனாதிபதியிடம் மனு கொடுத்துள்ளனர்.ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில், சி.பி.ஐ., வழக்குகளை கவனிக்கும், முதல்கூடுதல் செஷன்ஸ் நீதிபதியாக இருந்தவர், டி.பட்டாபிராம ராவ்.சுரங்க ஊழல் வழக்கில், கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு, முறைகேடாக ஜாமின் வழங்கியதாக, அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.அதே வழக்கில், மற்றொரு குற்றவாளியான, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒய்.ஸ்ரீ லட்சுமிக்கு, ஜாமின் மறுத்த நீதிபதி பட்டாபிராம ராவ், ஜனார்த்தன ரெட்டியை, ஜாமினில் விடுவித்தார்.இதற்காக, நீதிபதி பட்டாபிராம ராவ், 10 கோடி ரூபாயை லஞ்சமாக பெற்றதாகவும், அந்தத் தொகையை, தனது மகன் பெயரில், வங்கி லாக்கரில் வைத்திருப்பதாகவும், சி.பி.ஐ., குற்றம் சாட்டியது. இந்தப் புகாரைத் தொடர்ந்து, ஆந்திர மாநில ஐகோர்ட் தலைமை நீதிபதி மதன்.பி.லோகுர்,நீதிபதி பட்டாபிராம ராவை, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.இரு மாநிலங்களில், பூமியை வெட்டி, கனிம வளங்களை கொள்ளையடித்த ரெட்டி சகோதரர்களை, சி.பி.ஐ., கைது செய்தும், நீதிபதி ஜாமினில் விடுவித்தால், நாட்டை யார் காப்பாற்றுவது?இமயமலையையும், அரபிக் கடலையும் கூட, ரெட்டி போன்றவர்கள் விற்று விடுவர்.
இது இந்திரா காந்தி ஸ்டைல்!
ஆர்.முகமது ஷாபி, திண்டுக்கலிலிருந்துஎழுதுகிறார்: இந்திரா காந்தி ஆட்சியில் இருந்த போது, ஒரு பொருளுக்கு, இரண்டு ரூபாய் விலையை உயர்த்த வேண்டுமென்ற சூழ்நிலை வந்தால், தடாலடியாக, ஐந்து ரூபாயை உயர்த்தி உத்தரவிடுவார்.நாடு முழுவதும், கடும் எதிர்ப்பும் ஏற்பட்ட பிறகு, பெரிய மனது வைத்து, அதில், இரண்டு ரூபாயைக் குறைப்பார்; எதிர்ப்பும், அமளியும் அடங்கும்.கூட்டிக் கழித்துப் பார்த்தால், அரசு உயர்த்த உத்தேசித்திருந்த விலையை விட, கூடுதலாக ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு இருக்கும்.சமீபத்திய பெட்ரோல் விலை உயர்வு விஷயத்தில், சோனியாவின் ஆசி பெற்ற மன்மோகன், இந்திராவின் ஸ்டைலைத் தான் பின்பற்றியுள்ளார்.ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், மூன்று ரூபாய் என விலை உயர்த்திய மத்திய அரசு, தடாலடியாக, ஏழரை ரூபாய் உயர்த்தி உத்தரவிட்டது. நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதும், பெரிய மனது வைத்து,இரண்டு ரூபாயை குறைத்துள்ளது.விஷயம் இதோடு முடிந்து விடவில்லை. பெட்ரோல் விலையை உயர்த்தி, வாகன ஓட்டிகளின் வயிற்றெரிச்சலை மட்டும் கொட்டிக் கொண்ட மத்திய அரசு, குடும்பப் பெண்களையும் விட்டு வைக்கவில்லை.அரசின் செலவுகளைக் கட்டுப்படுத்த, டீசல் மற்றும் எரிவாயு விலையை, உடனடியாக உயர்த்த வேண்டியது கட்டாயம் என்று, பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவர் ரங்கராஜன் கூறி, திரியைப் பற்ற வைத்துள்ளார்.படிக்காத மேதை காமராஜரின் ஆட்சியில், பாமர மக்கள் முதல், படித்தவர்கள், பணக்காரர்கள் வரை, அனைவரும் மகிழ்ச்சியோடு இருந்தனர். இந்த பொருளாதார மேதைகளின் பிடியில் சிக்குண்டு, நாடும், நாட்டு மக்களும் படும் அவதியை, என்னவென்று சொல்ல?

