கீழக்கரை :கீழக்கரை நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா கணவர் ரிஸ்வான், துப்புரவு மேற்பார்வையாளர் முருகனை தரக்குறைவாக பேசியதாக கமிஷனரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தில் தலைவரின் கணவர் தலையீடுஅதிகரித்துள்ளதாக நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். தனக்கு துணையாக மட்டுமே வருகிறார்.
நிர்வாகத்தில் தலையிடுவது இல்லை என தலைவர் மறுத்தார். நேற்று காலை நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு மேற்பார்வையாளர் முருகனுக்கும், ரிஸ்வானுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் முருகனை, ரிஸ்வான் அவமரியாதையாக பேசினார்.
முருகன் கூறுகையில், இது சம்பந்தமாக கமிஷனரிடம் புகார் மனு கொடுத்துள்ளேன். மற்ற விபரங்கள் எதுவும் தெரிவிக்க முடியாது, என்றார்.
நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா கூறியதாவது: குப்பைக்கிடங்கில் பணி செய்ய வேண்டிய முருகன் நகராட்சி அலுவலகத்திற்கு வந்ததால் குப்பைகள் முறையாக கொட்டப்படவில்லை என தகவல் கிடைத்தது. கணவரை பார்த்து வரச் சொல்லி நகராட்சிக்கு அனுப்பினேன்.
விசாரிக்கச் சென்ற எனது கணவரை, முருகன் தரக்குறைவாக பேசியுள்ளார். இது குறித்து கமிஷனரிடம் தெரிவித்துள்ளேன், என்றார்.
