சேலம்: உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடத்துக்கான, டி.ஆர்.பி., தேர்வு,
இன்று நடக்கிறது. சேலத்தில், 11 தேர்வு மையங்களில், 4,079 பேர் கலந்து
கொள்கின்றனர்.தமிழகத்தில் காலியாக உள்ள, 34 உதவி தொடக்கக்கல்வி அலுவலர்
பணியிடத்துக்கான, டி.ஆர்.பி., தேர்வு இன்று நடக்கிறது. சேலம் மாவட்டத்தில்
இத்தேர்வை, 4,079 பேர் எழுதுகின்றனர். இவர்களுக்கு பாடவாரியாக, 11 தேர்வு
மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.தமிழ் பாடத்தை சேர்ந்தவர்கள் பாரதிவித்யாலயா,
பாலபாரதி மெட்ரிக் பள்ளிகளிலும், ஆங்கிலப்பாடத்தை சேர்ந்தவர்கள் ஸ்ரீசாரதா
மெட்ரிக் பள்ளி, ஸ்ரீசாரதா வித்யாலயா மேல்நிலைப்பள்ளிகளிலும்,
கணிதப்பாடத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள், சூரமங்கலம், ராமகிருஷ்ண சாரதா
வித்யாலயா, சூரமங்கலம், செயின்ட் ஜோசப் மகளிர் மேல்நிலைப்பள்ளிகளிலும்
தேர்வெழுதுகின்றனர்.
இயற்பியல் பாட விண்ணப்பதாரர்கள், சூரமங்கலம், நீலாம்பாள் சுப்ரமணியம்
மேல்நிலைப்பள்ளியிலும், வரலாறு பாடத்தை சேர்ந்தவர்கள், ஹோலி ஏஞ்சல்
மெட்ரிக் பள்ளியிலும், தாவரவியல், புவியியல் பாடங்களை சேர்ந்தவர்கள், சேலம்
சிறுமலர் மேல்நிலைப்பள்ளியிலும், வேதியியல் பாடத்தை சேர்ந்தவர்கள்,
அரிசிபாளையம், செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளியிலும், விலங்கியல் பாடத்தை
சேர்ந்தவர்கள், நெத்திமேடு ஜெயராணி மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும்
தேர்வெழுதுகின்றனர்.
ஹால்டிக்கெட்டுகள் கிடைக்கப்பெறாதவர்கள், இணையதளத்தில் ஹால்டிக்கெட்டுகளை
பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளலாம். உரிய ஆதாரங்களுடன், சம்பந்தப்பட்ட
தேர்வு மையத்துக்கு சென்றும், தேர்வெழுத அனுமதி பெறலாம்.காலை 10 மணி முதல் 1
மணி வரை நடக்கும் இத்தேர்வில் பங்கேற்போர் மொபைல்ஃபோன், பேஜர்,
கால்குலேட்டர், ரிஸ்ட் வாட்ச் ஆகியவை கொண்டு செல்ல தடை
விதிக்கப்பட்டுள்ளது. தாமதமாக வரும் தேர்வர்களை எக்காரணம் கொண்டும்,
அனுமதிக்க முடியாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.தேர்வில் முறைகேடுகள்
செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவருக்கு, எதிர்காலத்தில்
டி.ஆர்.பி., தேர்வு எழுத தடை விதிக்கப்படும். இவற்றை கண்காணிக்க, சேலம்
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஈஸ்வரன், மாவட்ட கல்வி அலுவலர் முனுசாமி
உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
