ஒருநாள் போட்டிக்கு குட்பை * அறிவித்தார் பாண்டிங்

சிட்னி: ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் ரிக்கி பாண்டிங். டெஸ்டில் தொடர்ந்து விளையாட முடிவு செய்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் பாண்டிங்.சமீபத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 544 ரன்கள்(சராசரி 108.80) குவித்தார். ஆனால், முத்தரப்பு ஒருநாள் தொடரில் பார்மின்றி தவித்தார். 5 போட்டிகளில் 18 ரன்கள்(2, 1,6, 2, 7) மட்டுமே எடுத்தார். இதன் சராசரி 3.6 தான். இதையடுத்து முத்தரப்பு தொடரில் இருந்து நீக்கப்பட்டார். தேர்வாளர்களின் இம்முடிவை ஏற்றுக் கொண்ட பாண்டிங், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இது குறித்து பாண்டிங் கூறியது:
அணியில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்ட நிலையில், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதை கனத்த மனதுடன் அறிவிக்க வேண்டியுள்ளது. இனி, ஆஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடப் போவதில்லை. தேர்வாளர்களும் எனக்கு வாய்ப்பு அளிக்க மாட்டார்கள். வரும் 2015ல் நடக்க உள்ள உலக கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை தயார் செய்து வருவதாகவும், அதில் என்னை சேர்க்கும் திட்டம் இல்லை என்று தேர்வுக்குழு தலைவர் ஜான் இன்வெரார்ட்டி திட்டவட்டமாக கூறினார். இதில், எனக்கு எவ்வித கசப்பு உணர்வும் இல்லை.
எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விடவில்லை. விடைபெறும் நோக்கில் கடைசியாக ஒருநாள் தொடரில் விளையாட வேண்டும் என்று விரும்பவில்லை. தொடர்ந்து டெஸ்ட் மற்றும் டாஸ்மானிய அணிக்காக விளையாடுவேன். ஸ்டீவ் வாக், மார்க் டெய்லர், டேவிட் பூன் போன்றவர்கள் ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெற்ற பின், டெஸ்டில் சிறப்பாக விளையாடினர். டெஸ்ட் போட்டிகளில் என்னாலும் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்பதை சமீபத்திய இந்தியாவுக்கு எதிரான தொடரில் அழுத்தமாக நிரூபித்தேன்.
இவ்வாறு பாண்டிங் கூறினார்.
----------------------

வெற்றி நாயகன்
அணியின் வெற்றிக்காக அதிக ரன், அதிக சதம் அடித்தவர்களில் பாண்டிங் முதலிடத்தில் உள்ளார். இவரது 13, 704 ரன்களில், அணியின் வெற்றிக்காக மட்டும் 10, 726 ரன்கள்(78.26 சதவீதம்) எடுத்துள்ளார். இதே போல 30 சதத்தில் 25, வெற்றி பெற்ற போட்டிகளில் அடித்துள்ளார். இதன் வெற்றி சதவீதம் 83.33. இப்பட்டியலில் சச்சின் 8வது இடத்தில் உள்ளார். இவரது 18, 201 ரன்களில், 11, 060 ரன்கள்(60.83 சதவீதம்) தான் இந்தியா வெற்றி பெற்ற போட்டிகளில் எடுக்கப்பட்டது. 48 சதத்தில் 33 சதம்(68.75 சதவீதம்) தான் அணியின் வெற்றிக்கு உதவியுள்ளது.
-----------------
நழுவாத கைகள்
பீல்டிங்கில் கெட்டிக்காரரான பாண்டிங், ஒருநாள் போட்டிகளில் அதிக கேட்ச் (160) பிடித்துள்ளவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் இலங்கையின் ஜெயவர்தனா(186) உள்ளார்.
--------------
உலக கோப்பையில்...
ஆஸ்திரேலிய அணிக்கு இரு முறை(2003, 07) உலக கோப்பை வென்று தந்துள்ளார் பாண்டிங். உலக கோப்பை அரங்கில் அதிக சிக்சர்(31) அடித்துள்ள இவர், அதிக ரன் எடுத்துள்ளவர்கள் பட்டியலில் சச்சினுக்கு(45 போட்டி, 2, 278 ரன்) அடுத்து இரண்டாவது இடத்தில்(46 போட்டி, 1743 ரன்) உள்ளார்.