ஒலிம்பிக் கனவை கலைக்கும் ஒரு ஆண்டு தடை உத்தரவு:6 வீராங்கனைகளின் நிலை பரிதாபம்

புதுடில்லி:

ஊக்கமருந்து பயன்படுத்தி பிடிபட்ட அஷ்வினி, சினி ஜோஸ் உள்ளிட்ட ஆறு வீராங்கனைகளுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. நீளம் தாண்டுதல் வீரர் ஹரி கிருஷ்ணனுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து இவர்கள் லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ளது.
ஆசிய தடகளத்தில் 400 மீ., தடை ஓட்டம் தங்கம் வென்றவர் அஷ்வினி. இவர், 4*400 மீ., தொடர் ஓட்டத்தில் மன்தீப் கவுர், ஜுவானா மர்முவுடன் இணைந்து தங்கம் வென்றுள்ளார். இவர்களுடன் சினி ஜோஸ், மேரி டயனா தாமஸ், பிரியங்கா பன்வார் மற்றும் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து (ஸ்டிராய்டு) பயன்படுத்தியது நிரூபணம் ஆனது.
இதனால் தேசிய ஊக்கமருந்து தடுப்பு மையம் (என்.ஏ.டி.ஏ.,), சர்வதேச போட்டிகளில் பங்கேற்க, இவர்களுக்கு ஒராண்டும், நீளம் தாண்டுதல் வீரர் ஹரி கிருஷ்ணனுக்கு 2 ஆண்டும் தடை விதிக்கப்பட்டது. என்.ஏ.டி.ஏ., தலைவர் தினேஷ் தயாள் கூறியது:
ஆறு வீராங்கனைகளும் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானது. இது விதி 2.1 ஐ மீறிய செயல் என்பதால், இவர்களுக்கு இரு ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும். ஆனால், சர்வதேச போட்டிகளின் போது இல்லாமல், சாதாரண சோதனையில் தான் பிடிபட்டனர்.
தவிர, இவர்களது உடலில் தடைசெய்யப்பட்ட மருந்து எப்படி வந்தது என கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் என்.ஏ.டி.ஏ., விதி 10.5.2ன் படி, குறைந்த அளவாக ஓராண்டு தடை விதிக்கப்படுகிறது. இதில் தற்காலிக தடை விதிக்கப்பட்ட நாட்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
இவ்வாறு தினேஷ் தயாள் கூறினார்.

வாய்ப்பு எப்படி?


இதில் சினி ஜோஸ், மேரி டயனா தாமசின் தடை, ஜூன் 30 (2012), அஷ்வினி, பிரியங்காவின் தடை, வரும் ஜூலை 3லும் முடிகிறது. ஆனால், ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டி ஜூன் 29-30ல் (2012) நடக்கிறது. ஜூலை 2ல் அனைத்தும் முடிந்துவிடும். இதனால் இந்த நான்கு வீராங்கனைகளின் ஒலிம்பிக் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வருகிறது.
அதேநேரம் மன்தீப் கவுர், ஜுவானா மர்முவின் தடை காலம், ஜுன் 22ல் முடிகிறது. சர்வதேச விதிப்படி தடை முடிந்தவுடன், இவர்களுக்கு மீண்டும் சோதனை நடத்த வேண்டும். ஒருவேளை மறுநாளே சோதனை செய்தாலும், முடிவுகள் 48 மணி நேரத்துக்குள் வர வேண்டும். இதனால் இவர்கள் தகுதி சுற்றில் பங்கேற்க வாய்ப்புள்ளது.