தேடல்

கடந்த ஆண்டு சாதனையை முறியடிக்கிறார் "வீரபாண்டி': சிறையில் இன்று 50வது நாள்

சேலம்: நில அபகரிப்பு வழக்கில், கைதாகி சிறை சென்ற வீரபாண்டி ஆறுமுகம், கடந்த ஆண்டு சிறைவாசம் மேற்கொண்ட சாதனையை, இந்த வாரத்தில் முறியடிக்கிறார்.

கடந்த, 2011 ஜூலை16ல் முதன் முறையாக மாநகர நில அபகரிப்புக் குழு போலீசாரால், வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு, பிரிமியர் ரோலர் மில் அபகரிப்பு வழக்குகள் பதிவு செய்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசாரால் அவரை கைது செய்ய முடியவில்லை. அதன் பின்னர் ஜூலை 30ல் தாசநாயக்கன்பட்டி பாலமோன்ராஜ் வழக்கில் முதன் முறையாகக் கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டார். செப்டம்பர் 6ல் முன் ஜாமின் பெற்று வெளியே வந்த அவரை, அன்றே கோயமுத்தூர் ஜூவல்லரியின் உரிமையாளர்கள் நிலத்தை அபகரித்த வழக்கில் கைது செய்து, திருச்சி சிறையில் அடைத்தனர். கடந்த, 2011ல் மொத்தம் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இரண்டு வழக்குகளில் மட்டும், அவர், 53 நாட்கள் சிறையில் இருந்தார். அதன் பின்னர், கடந்த ஆண்டில் அவர் வேறு எந்த வழக்கிலும் சிக்க வில்லை. இந்நிலையில், 2012 ஜூன் 3ம் தேதி வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது, அங்கம்மாள் காலனி குடிசைகளை எரிக்க ரவுடிகளுடன் சேர்ந்து திட்டம் தீட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஜூன் 4ம் தேதி சென்னையில் அவரை கைது செய்த போலீசார், வேலூர் சிறையில் அடைத்தனர்.

ஜூன் 18ம் தேதி போலீஸ் கமிஷனர் மாஹாலியின் உத்தரவுப்படி, குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து அவரின் இரண்டாவது மனைவி லீலாவதி, ஜூன் 25ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு குறித்து விளக்கம் அளிக்க, சேலம் மாநகர போலீசாருக்கு, நான்கு வார காலம் அவகாசம் வழங்கி உள்ளது.

இதற்கிடையே குண்டாஸ் கைதை எதிர்த்து, வீரபாண்டி ஆறுமுகம் தரப்பில் அட்வைஸரி கமிட்டியிடம் தாக்கல் செய்த மனு, ஜூலை11ல் விசாரணைக்கு வந்தது. அதில் அவர் மீதான குண்டாஸ் உறுதி செய்யப்பட்டதால், தொடர்ந்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இன்றுடன் அவர், 50வது நாளாக சிறைவாசகத்தைத் தொடர்கிறார். கடந்த ஆண்டில், 53 நாட்கள் மட்டுமே சிறையில் இருந்த வீரபாண்டி ஆறுமுகம், நடப்பாண்டில் இன்றுடன், 50வது நாள் சிறைவாசத்தை அனுபவித்து வருவதால், இன்னும் நான்கு நாட்களில் கடந்த ஆண்டின் சாதனையை முறியடிக்கிறார். இந்நிலையில், போலீசாருக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள காலக்கெடு நாளை மறுநாள் (ஜூலை 25) முடிவுக்கு வருகிறது. போலீசார், ஜூலை 26ம் தேதி, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் குண்டர் சட்ட கைது குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

சிறை மாற்றமா? ஆட்சி மாற்றத்துக்கு பின், ஆறு வழக்குகளில் சிக்கிய வீரபாண்டி ஆறுமுகம், இதுவரை கோவை, திருச்சி, சென்னை, வேலூர் ஆகிய சிறைகளில் சிறைவாசத்தை அனுபவித்து விட்டார். தற்போது வேலூர் சிறையில் உள்ள அவருக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைப்பதாக உளவுத்துறை அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. இதனால், விரைவில் அவர், மதுரை அல்லது பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றம் செய்யப்படலாம் என, சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

விசாரணை துவக்கம்: சேலம், செவ்வாய்பேட்டை தொழிலதிபரை மிரட்டி, 30 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை பறிமுதல் செய்ததாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் மனு, தற்போது தூசு தட்டப்பட்டுள்ளது. ஓரிரு நாளில், அந்த புகார் மனு மீது, நில அபகரிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்வர் என, போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.