தி.மு.க., எதிர்க்கட்சியாக இருக்கும்போது அதன் செயல்பாடு எப்போதும் அலாதியானதாக இருக்கும். கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களை தயார்படுத்தி, ஆளுங்கட்சிக்கு எதிராக களங்களை அமைப்பதில், தி.மு.க., தலைவர் கருணாநிதி வல்லவர். அந்த திறமை தான், கட்சியை இதுவரை உயிர்பித்து வைத்து, அடுத்தடுத்த ஆண்டுகளை நோக்கி நகர்த்தி வரும் அச்சாணியாக இருந்து வருகிறது.
14 ஆண்டு வனவாசம்: தமிழக முதல்வராக எம்.ஜி. ஆர்., இருந்தபோது, தி.மு.க., வை 14 ஆண்டுகள் வனவாசம் அனுப்பி வைத்தார். அவரது மறைவுக்கு பிறகு தான் ஆட்சி, அதிகாரத்தின் பக்கம், தி.மு.க., வால் வர முடிந்தது. எதிர்க்கட்சியாக அரசியல் செய்வதில் பல பாடங்களை தி.மு.க., கற்றுக் கொள்ள அந்த காலம் உதவியது. தற்போது சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை கூட பெற முடியாத நிலையில், மக்கள் மன்றத்தில் நெருங்கி, அவர்களது ஆதரவை பெற முயற்சிக்க வேண்டிய நிலையில், அடுத்தடுத்த அதிரடிகள் தி.மு.க.,வின் ஆணி வேர் வரை அசைத்துப் பார்த்திருக்கின்றன.
சோதனை மேல் சோதனை: ஸ்பெக்ட்ரம்; நில அபகரிப்பு வழக்கு, லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என, சோதனை மேல் சோதனை வர, திகைத்துப் போய் இருக்கின்றனர் தி.மு.க.,வின் முன்னணி தலைவர்கள்.இதற்கு முன் எப்போதும் இத்தகைய நெருக்கடியான நிலையை சந்தித்தது இல்லை என்ற கருத்து தி.மு.க., முன்னணியினரால் முணுமுணுக்கப்படுகிறது. மின்வெட்டு, பஸ், பால் கட்டண உயர்வு போன்ற மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில் கூட எதிர்க்கட்சியாக தனது பதிவை முழுமையாக செய்ய திட்டமிட முடியாமல், தி.மு.க., முடங்கிப் போயிருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இந்த பாதிப்பிலிருந்து முழுமையாக வெளிவரும் முன்பே, இத்தனை ஆண்டு வரலாற்றில் இல்லாத அளவுக்கு, தலைமைக்கு எதிராக, கட்சி தலைவர் முன்பே பொதுக்குழுவில் எழுந்த எதிர்ப்புக்குரலால் அதிர்ந்து போயிருக்கிறது தி.மு.க., தலைமை.
அந்த நாள் ஞாபகம்...: தி.மு.க.,வின் தற்போதைய நிலை குறித்து பேசிய அரசியல் பார்வையாளர் ஒருவர், 2004ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு பின் மத்திய அரசில் தி.மு.க., அங்கம் வகித்தது. ஏழு அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றனர். தமிழகத்தில் அப்போதும் அ.தி.மு.க., ஆட்சி என்றாலும், தி.மு.க., வினரிடம் இருந்த உற்சாகம் அலாதியானது. தி.மு.க., தலைவரை விழா நாயகராக்கி, மத்திய அமைச்சர்கள் நடத்திய விழாக்கள் இந்த உற்சாகத்தை பல மடங்கு கூட்டின. அந்த இரு ஆண்டுகளும், தமிழகத்தில் ஒரு போட்டி அரசாங்கமே தி.மு.க., நடத்திக்காட்டியது என்று அந்த நாள் நிகழ்வுகளை நினைவுபடுத்தினார். மேலும் அவர் கூறும்போது, அதே போல் தற்போதும் தி.மு.க.,வைச் சேர்ந்த ஐந்து பேர் மத்திய அமைச்சர்களாக உள்ளனர். இவர்களைக் கொண்டு எந்த ஒரு நிகழ்ச்சியையும் நடத்தவோ, அது பற்றி யோசிக்கவோ கூட முடியாமல் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசில் இடம்பெற்றிருந்தாலும், அங்கு தனது வலுவான ஆதிக்கத்தை பதிக்க முடியாமல் தடுமாறுகிறது தி.மு.க., என்றார். குடும்ப பிரச்னைக்கு முன்னுரிமை கொடுப்பதா, ஆளுங்கட்சிக்கு எதிராக அரசியல் நடத்துவதா, ஸ்பெக்ட்ரம், நில மோசடி போன்ற வழக்குகள் குறித்து கவலைப்படுவதா, தே.மு.தி.க., போன்ற கட்சிகளின் வளர்ச்சியால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து யோசிப்பதா என நெருக்கடியின் உச்சத்தில் தி.மு.க., தலைமை உள்ளது. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் கணிசமான ஓட்டுக்களை பெறுவதும் தற்போதைய நெருக்கடிகளில் ஒன்றாக மாறியுள்ளது.
கட்சிக்கு எப்போது நெருக்கடி வருகிறதோ, அப்போது நீதிக்கட்சி, பகுத்தறிவு, ஆரியர் - சூத்திரர், இந்தி எதிர்ப்பு போன்ற விஷயங்களை தலைமை ஞாபகப்படுத்தும். அதன் மூலமாக, தனி அரசியல் பாதையை வகுத்து, கொஞ்ச நாள் அதில் பயணிக்கும். அது கட்சிக்கும் தெம்பை கொடுக்கும். தற்போது, கட்சித் தலைமை மீண்டும் இந்த விஷயங்களை தொடத் துவங்கியுள்ளதில் இருந்து கட்சித் தலைமையின் நிலைமை உங்களுக்கு புரியும், என்றார், பெயர் வெளியிட விரும்பாத முன்னணி தி.மு.க., நிர்வாகி ஒருவர்.
- நமது சிறப்பு நிருபர் -
