தேடல்

கட்சியை விட்டு விலக, "பலாப்பழம்' முடிவு?

சில, பல எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவோட, கட்சிய விட்டு வெளில போயிடலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கார் பா... என, நெடித் தகவலுடன், விவாதத்தைத் துவக்கினார் அன்வர்பாய்.
யாருங்க... ஆளுங்கட்சில யாராவது கிளம்பத் தயாராயிட்டாங் களாங்க... எனக் கேட்டார் அந்தோணிசாமி.
இல்லே பா... புதுக்கோட்டை இடைத் தேர்தல்ல, பேர் சொல்லும் படி, எந்த பொறுப்பும் கொடுக்கலேங்கற வருத்தம், தேர்தல் தோல்வியால, கட்சிக்கும், இனி எதிர்காலம் எப்படி இருக்குமோன்னு கவலை... இதை எல்லாம் கணக்கு பண்ணி, தனக்கு ஆதரவு தரக் கூடிய எம்.எல்.ஏ.,க்கள் பட்டியல் எடுக்க ஆரம்பிச்சுட்டாரு... இவர் அதிகம் எதிர்த்துப் பேச விரும்பாத கட்சியின் தலைமை, லோக்சபா தேர்தல் நேரத்துல, மெதுவா காய் நகர்த் துங்கன்னு, அறிவுரை சொல்லி இருக்கறதால, அதுக்கேத்தா மாதிரி நடந்துக்கலாம்ன்னு முடிவு பண்ணியிருக்காரு பா... என, அன்வர்பாய் கூறிக் கொண்டிருக்கையில், நான் பலாப்பழம் சாப்ட்டு ரொம்ப நாளாச்சு... பண்ருட்டி பக்கம் போய்ட்டு வரலாம்ன்னு இருக்கேன்... என குப்பண்ணா, திடீரென இடையில் புகுந்து பேசிவிட்டு, அடுத்த மேட்டரைத் தொடர்ந்தார்...
ஆளும் கட்சி எம்.பி., புதுக்கோட்டை பக்கமே போகாம, டிமிக்கி கொடுத்த விவகாரம், மேலிடத்துக்குத் தெரிஞ்சுடுத்து ஓய்... என்ற குப்பண்ணாவிடம், யாரு பா அது... விவரமாசொல்லு பா... எனக் கேட்டார் அன்வர்பாய்.
வேற யாரு... டாலர் சிட்டிலேர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டஎம்.பி., தான்... அவருக்கு போட்டியா இருக்கற,மாவட்ட அமைச்சர், தேர்தல் பணிக் குழு சார்பில், புதுக்கோட்டை போயிருந்தார்... அதனால, எம்.பி., போகலை... புதுக்கோட்டை வந்திருந்தா, பூத்தை பிரிச்சு கொடுத்திருப் போம்னு அமைச்சர் தரப்புலயும், பூத் வேலை கொடுத்திருந்தா, புதுக்கோட்டை போயிருப் போம்னு எம்.பி., தரப்புலயும் சொல்லிண் டிருக்கா...அந்த எம்.பி., இப்ப தான், திருப்பூர்ல ஒரு, சி.பி.எஸ்.இ., பள்ளி தொறந்திருக்கார்...இப்ப, புதுக்கோட்டை விவகாரத்துல, அதிருப்தி ஏற்பட்டதால, என்ன நடக்குமோன்னு பயந்துண்டிருக்கார் ஓய்... சிவசிவான்னு சாமியை வேண்டிண்டு,ஆனந்தமா இருக்க வேண்டியது தான்... எனக் கூறி முடித்தார் குப்பண்ணா.
கட்சிக்காரங்க சண்டையை தீர்க்க, அவக வீட்டுக்கே போய், சமாதானம் செஞ்சிருக்காரு வே... என, கடைசி மேட்டரைத் துவக்கினார் அண்ணாச்சி.
எந்தத் தலைவருங்க... எனக் கேட்டார் அந்தோணிசாமி.
விவரம் கேளும் வே... சென்னைக்குப் பக்கத்துல, திருப்போரூர் பேரூராட்சி, ம.தி.மு.க., வசம் இருக்கு... இதோட தலைவர் சக்தீஸ்வரி; துணைத் தலைவர், சசிகலா... சக்தீஸ்வரி கணவர் சிவராமன், கட்சியின் ஒன்றியச் செயலர்; சசிகலாவோட கணவர் லோகு, நகரச் செயலர்... இவகளுக்கு, மோதல் முத்திக்கிச்சு... இதைக் கேட்ட, கட்சிப் பொதுச் செயலர், ரெண்டு பேர் வீட்டுக்கும் போய் சமாதானம் செஞ்சாரு வே... என, புளகாங்கிதம் அடைந்தவராய் அண்ணாச்சி சொல்ல, இடைமறித்த அன்வர்பாய், வௌரம் பத்தாது பா ஒனக்கு... கட்சியில இருக்கற ஒண்ணு, ரெண்டு பேரும் சண்டை போட்டு, வெளில போய்ட்டா, கட்சியே காலியா யிடும்ல... எனக் கூறி, பெஞ்சிலிருந்து எழுந்தார்; மற்றவர்களும் கலைந்து சென்றனர்.


கட்காரி - அத்வானி மீண்டும், லடாய்?

தமிழ்நாடு போறதுக்கு, நான் யார்ட்டயும், பர்மிஷன் வாங்கணும்ன்னு அவசியமில்லேன்னு, தன் சகாக்களிடம் சொன்னாராம் ஓய்... எனக் கூறியபடியே, பெஞ்ச்சில் வந்தமர்ந்தார் குப்பண்ணா.
யாரு வே... நீர் சொல்றதைப் பார்த்தா, வெளிமாநிலக்காரரு போலத் தெரியுது... எனக் கேட்டார் அண்ணாச்சி.
ஆமாம் ஓய்... பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, இங்க வந்து, சி.எம்.,மைப் பார்த்து, சில விஷயங்கள் பேசிட்டு போனார் இல்லையா... அந்த விவகாரம், இப்ப, அவரோட கட்சியில பிரச்னையைக் கிளப்பிடுத்து... கட்சித் தலைவர் கட்காரியை ஆலோசிக்காம, இவராவே இங்க வந்து, சி.எம்.,மை, மீட் பண்ணினதா சொல்றா...
இங்க, எல்லாத்தையும் பேசி முடிச்சு, டில்லிக்கு போய், உயர்மட்டக் கூட்டத்தை கூட்டச் சொல்லி, கட்காரிக்கு, அத்வானி உத்தரவு போட்டார்... எங்கிட்ட சொல்லாம போனவர் உத்தரவுக்கு நான் கீழ்படியணுமா... என்று கேட்டு,உள்ளுக்குள் புகைந்தபடி, கூட்டத்தைக் கூட்டினார் கட்காரி... இதைக் கேள்விப்பட்டதும் தான், அத்வானி, நான் யார்ட்டயும், பர்மிஷன் வாங்கணும்ன்னு அவசியமில்லேன்னு சொன்னா ராம் ஓய்... எனக் கூறி முடித்தார் குப்பண்ணா.
பெங்களூரு போக முடிவு பண்ணியிருக்காங்கங்க... என, அடுத்த தகவலைக் கூறினார் அந்தோணிசாமி.
யாரு பா போறாங்க... நித்தி தான் அங்கிருந்து வந்துட்டாரே... என, சந்தேகம் கிளப்பினார் அன்வர்பாய்.
அவரைப் பார்க்கப் போயிருந்தா, என்ன ஆகி இருக்கும்ன்னு, சம்பந்தப்பட்டவருக்கு தெரியும்ங்க... அவரு இல்லே... நான் சொல்றது, தி.மு.க.,வைப் பத்தி... விழுப்புரத்துல, ஆகஸ்ட் 5ம் தேதி, டெசோ மாநாடு நடக்குதுங்க... இந்த மாநாட்டை வெற்றிகரமா நடத்தி முடிக்க, கருணாநிதி ஆர்வமா இருக்காரு... இலங்கைத் தமிழருக்கு செஞ்ச பணிகளைத் தொகுத்து, கையேடு ஒன்றை, மாநாட்டில் வெளியிட அவர் முடிவு பண்ணியிருக்காரு...
மாநாட்டுல தன் னோட பேச்சு, உலகத் தமிழர்களைக் கவரணும்ங்கறது அவரோட எண்ணம்... இது சம்மந்தமான ஏற்பாடுகளைக் கவனிக்க, அவரு பெங்களூரு போக திட்டமிட்டுருக்காருங்க... எனக் கூறி முடித்தார் அந்தோணிசாமி.
பள்ளிக் கல்வி அமைச்சரோட, ஸ்பெஷல் பி.ஏ.,வை நீக்கிட்டாங்க பா... என, கடைசி மேட்டருக்கு மாறினார் அன்வர்பாய்.
என்ன காரணம்ங்க... என விசாரித்தார் அந்தோணிசாமி.
தொடர்ந்து வந்த புகார்கள் தான் காரணம்... இவர், முன்பு திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியா இருந்தபோது, சிவபதியிடம் நல்ல அறிமுகம்...கல்வி அமைச்சரா சிவபதி பதவியேத்ததும், ஸ்பெஷல் பி.ஏ., பதவியை வாங்கினார்...
சமீப காலமா, உயர் அதிகாரிகளுக்கு கொஞ்சம் கூட மரியாதை தராம, கடுமையா நடந்துகிட்டாருன்னு தகவல்... நேத்து வரைக்கும், நம்ம கீழ வேலை பார்த்தவர், பி.ஏ., ஆனதும், நம்மளை ஆட்டிப் படைக்கிறாரேன்னு, உயர் அதிகாரிகள் வேதனை பட்டுருக்காங்க...
பல முறை அமைச்சர் எச்சரிச்சும், அவர் மாறாததால, பதவியை பறிச்சிட்டதா, கோட்டையில பேச்சு அடிபடுது பா... என்று கூறி எழுந்தார் அன்வர்பாய்; மற்றவர்களும்!