"கற்றுக் கொள்வதை மாணவர்கள் விரும்ப வேண்டும்'

அவிநாசி :மாணவர்கள் கேள்வி கேட்கும் திறனை வளர்த்து கொண்டு, கற்றுக் கொள்வதை தொடர்ந்து விரும்ப வேண்டும், என்று சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.
கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டி தேஜா சக்தி பெண்கள் பொறியியல் கல்லூரியில் நேற்று இயற்பியல் மற்றும் வேதியியலில் கண்டுபிடிப்பு என்ற தலைப்பில், மாநாடு நடந்தது; கல்லூரி நிர்வாக இயக்குனர் முத்து நடராஜன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனிராஜ் வரவேற்றார்.
சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, மாநாட்டை துவக்கி வைத்து பேசியதாவது:
சாதிக்க விரும்பும் துறையில், சிறிய வயதிலிருந்து அது குறித்து அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். புதுமையான சிந்தனைகளை கொண்டு உழைத்தால் அதற்கான வெற்றி கிடைத்தே தீரும்; புதிய சிந்தனைகளும் வரவேற்கப்படும்.

விஞ்ஞானி ஐன்ஸ்டீன் பல கண்டுபிடிப்புகளை கண்டறிய அவர் பயன்படுத்தியது வெறும் காகிதத்தையும், பென்சிலையும் மட்டும்தான். சாதிக்க வேண்டுமென எண்ணினால், இருப்பதே போதும் என்று ஐன்ஸ்டீன் நமக்கு உணர்த்தியுள்ளார். மாணவர்கள் எப்போதும் காதுகளையும், கண்களையும் திறந்து வைத்திருக்க வேண்டும். தமிழ்வழிக்கல்வியில் பிளஸ் 2 வரை படித்து விட்டு, பொறியியல் முழுவதும் ஆங்கிலத்தில் படிக்கும் போது துவக்கத்தில் சிரமப்பட்டேன்.
தொடர்ந்து முயற்சித்ததால், கல்லூரியில் முதலிடம் பெற்றேன். தற்போது ஆங்கிலத்தில் சரளமாகவும் பேசுகிறேன்; ஏன் நம்மால் முடியாது என்ற எண்ணமே உத்வேகம் கொடுத்தது. மாணவர்கள், எப்போதும் கற்றுக் கொள்வதை விரும்ப வேண்டும். அப்போதுதான் புதிய சிந்தனைகள் கண்டுபிடிப்பாக மாற்றம் பெறும்; வெற்றியும் கிடைக்கும்.
இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.

மாநாட்டில் கல்லூரி தாளாளர் தாராலட்சுமி, மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுமித்ரா, சென்னை டி.ஆர்.டி.ஓ., பேராசிரியர் கிருஷ்ணகுமார், பி.எஸ்.ஜி., பொறியியல் கல்லூரி பேராசிரியர் கண்ணன் உட்பட பலர் பேசினர். மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த 40 பொறியியல் கல்லூரியிலிருந்து 160 மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் தங்களது ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்து பேசினர்.
இயற்பியல் துறை பேராசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
2014 ல் சந்திராயன் -2: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறுகையில், சந்திராயன் - 1 தனது செயல்பாடுகளை முடித்து கொண்டுள்ளது. அடுத்ததாக சந்திராயன் - 2, வரும் 2014 ல் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அதற்கான பணி நடந்து வருகிறது, என்றார்.