தேடல்

கலெக்டர் அலுவலகத்தை கொடிக்குளத்தில் அமைக்க பரிசீலனை

மதுரை:இடநெருக்கடியில் சிக்கி தவிக்கும் மதுரை கலெக்டர் அலுவலகத்தை, அனைத்து துறைகளையும் உள்ளடக்கியதாக, ஒருங்கிணைந்த அலுவலகமாக கொடிக்குளம் பகுதியில் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.மதுரை கலெக்டர் அலுவலகம், 1916ல் பிரிட்டிஷ் ஆட்சியின்போது, முழுக்க முழுக்க கற்களால் எழில்மிகு தோற்றத்துடன் அமைக்கப்பட்டது. நூறாண்டை நெருங்கி விட்டபோதிலும் பலமுடன் விளங்குகிறது. ஆனால் தற்போது இடநெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இங்கு வருவாய், ஊராட்சி, கருவூலம், கனிமவியல், மக்கள் தொடர்பு என 18க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் உள்ளன. ஆனால் முக்கிய பல துறைகளின் மாவட்ட அலுவலகங்கள் இல்லை. உதாரணமாக மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு அலுவலகம், 7 கி.மீ., தொலைவில் உள்ள வில்லாபுரத்தில் உள்ளது. சமூகநலத் துறையின் அலுவலகமோ சொக்கிக்குளத்தில் உள்ளது. நெடுஞ்சாலைத் துறை, கல்வித்துறை, பொதுப்பணித் துறை அலுவலக வளாகங்கள் ஒரு கி.மீ., தொலைவிலும், மருத்துவத் துறையின் அலுவலகம் 5 கி.மீ., தொலைவில் விசாலாட்சிபுரத்திலும் உள்ளன. டாஸ்மாக் அதிகாரியின் அலுவலகமோ சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது.
மாவட்ட அதிகாரிகள் கலெக்டரின் நேரடி கண்காணிப்பில் இருப்பது அவசியம். தொலைவில் உள்ளதால், கலெக்டரின் ஆலோசனை கூட்டங்களுக்கு அதிகாரிகள் வந்து செல்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே ஒருங்கிணைந்ததாக இருந்தால் நிர்வாகம் சீரடையும். இதைக் கருத்தில் கொண்டு முந்தைய கலெக்டர் சகாயம் நிலநிர்வாக ஆணையர், வருவாய்த்துறை கமிஷனர் ஆகியோருக்கு கடந்த ஆண்டு ஜூனில் உத்தேச அறிக்கை அனுப்பினார். அதில், கே.புதூர் கொடிக்குளம் பகுதியில் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கு ஒதுக்கப்பட்ட 83.71 ஏக்கர் நிலத்தில், தற்போது பல்கலை அமையவில்லை. இதில் புதிய கலெக்டர் அலுவலகத்தை அமைக்கலாம். இதன் அருகில் எஸ்.பி., அலுவலகம், உள்ளது. மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., தூரத்தில் உள்ளது. மேலும் தற்போதைய கட்டடம் நூறுஆண்டுகளை நெருங்குவதால், இதை பாரம்பரிய கட்டடமாக அறிவிக்கலாம், என தெரிவித்துள்ளார். மேலும் இடத்தை நேரடியாக ஆய்வு செய்து, ரூ. 19 கோடி மதிப்பீட்டில் கட்டடம் கட்டலாம் எனவும் தெரிவித்துள்ளார்.