மதுரை: கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடுபவர்களுக்கு, நிதி
உதவி அளித்ததாகக்கூறி, மத்திய அரசு அனுப்பிய நோட்டீசுக்கு, தூத்துக்குடி
தொண்டு நிறுவனம் விளக்கம் அளிக்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
தூத்துக்குடி பல்நோக்கு சமூக சேவை சங்க செயலாளர் மரியா வளவன் தாக்கல் செய்த
மனு:
எங்கள் சங்கம் சார்பில் 2 ஆஸ்பத்திரிகள் நடத்தப்படுகிறது. சுய உதவிக்
குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கப்படுகிறது. மக்களுக்கு 4500 கழிப்பறைகள்
கட்டிக்கொடுத்துள்ளோம்.
மத்திய அரசு அதிகாரிகள் ஜன.,14 முதல் 19 வரை எங்கள் அலுவலக கணக்குகளை ஆய்வு
செய்தனர். மத்திய அரசு மே 3 ல் எங்களுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியது.
அதில், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடுபவர்களுக்கு,
வெளிநாட்டு நிதியை பயன்படுத்தியதாக கூறியுள்ளனர்.மேலும், 2007-2011 வரை
வரவு-செலவு கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் என்பன உட்பட 7 கேள்விகள் இடம்
பெற்றுள்ளன. எங்களுக்கு கிடைக்கும் வெளிநாட்டு நிதியை முடக்க
வாய்ப்புள்ளது. 55 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்க்கான ஆவணங்கள் கரையான்களால்
அரிக்கப்பட்டுவிட்டது. மத்திய அரசின் நோட்டீசை ரத்து செய்ய உத்தரவிட
வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இம்மனு நீதிபதி கே.வெங்கட்ராமன்
முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு வக்கீல் இ.டி.ராஜேந்திரன்
ஆஜரானார். நீதிபதி, மனுதாரர் மத்திய அரசின் நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க
வேண்டும். மனு பைசல் செய்யப்படுகிறது, என்றார்.

