குடிநீரில் காபி கழிவு: 50 பேர் பாதிப்பு

தாண்டிக்குடி :காமனூர் ஊராட்சியில் சுகாதாரமற்ற குடிநீரால், 50 பேர் வந்தி, வயிற்றுப் போக்கால் பாதித்துள்ளனர்.
இங்குள்ள கானல்காடு பகுதிக்கு வெட்டுகாட்டு ஓடை பகுதியிலிருந்து, குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. காபி கழிவு குடிநீரில் கலந்ததால், ஒரு வாரமாக, சிலருக்கு காய்ச்சல் இருந்தது. இதுவரை 50 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். பூலத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய நடமாடும் மருத்துவ குழுவினர், முகாம் அமைத்து கண்காணித்து வருகின்றனர். குடிநீர் ஓடையில் கலக்கும் காபி தோல் கழிவுகளே இதற்கு காரணம். குடிநீர் தொட்டிகள் அசுத்த நிலையில் உள்ளன. கழிப்பிட வசதியின்றி திறந்த வெளியை பயன்படுத்தும் நிலை, குவிந்துள்ள குப்பை, தூர்வாரப்படாத சாக்கடை என, சுகாதாரம் பாதித்துள்ளது.
டாக்டர் ராணி வீரக்குமார் கூறுகையில், காய்ச்சிய குடிநீர் பயன்படுத்த கூறியுள்ளோம், என்றார்.
கிராமத்தினர் கூறுகையில், தாண்டிக்குடி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற முடியவில்லை, என்றனர்.