காணாமல் போன மாணவனை ஒப்படைக்க ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியவருக்கு வலை

திருத்தணி:காணாமல் போன பள்ளி மாணவனை ஒப்படைக்க, 5 லட்சம் ரூபாய் கேட்டு

மிரட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர்.திருத்தணி அடுத்த, விநாயகபுரம்

கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் சந்திரசேகரன், 15. இவர்

திருத்தணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து

வந்தார். இவர் கடந்த, டிசம்பர், 12ம் தேதியன்று காலை, டியூசனுக்கு செல்வதாக

கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.இதுகுறித்து, 15ம் தேதியன்று

சுப்பிரமணி கொடுத்த புகாரின்பேரில் திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து

விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம், இரவு 10.30 மணிக்கு

மர்ம ஆசாமி ஒருவர் சுப்பிரமணியின் மொபைல் போனில் தொடர்பு கொண்டு, உன் மகனை

ஒப்படைக்க, 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என கூறிவிட்டு மொபைல்

இணைப்பை துண்டித்தார்.

சுப்பிரமணி, திருத்தணி சென்று போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து

சுப்பிரமணிக்கு வந்த தொலைபேசி எண்ணை வைத்து திருப்பதிக்கு சென்று போலீசார்

விசாரணை செய்தனர். விசாரணையில், பொது பூத்தில் இருந்து மர்ம நபர்

பேசியுள்ளது தெரியவந்தது.துண்டு பிரசுரத்தை பார்த்துமிரட்டலா...?

காணாமல் போன மகனை கண்டுபிடித்தால் கீழ்க்கண்ட மொபைல் போனில் தகவல்

தெரிவிக்குமாறு, இரு நாட்களுக்கு முன், துண்டு பிரசுரங்களை அச்சிட்டு

திருப்பதியில் ஆங்காங்கே சுப்பிரமணி ஒட்டியுள்ளார். சுப்பிரமணிக்கு பணம்

கேட்டு மிரட்டல் வந்த தொலைபேசி பூத் அருகிலும் இந்த துண்டு பிரசுரம்

ஒட்டியுள்ளதால், அந்த நம்பரை பார்த்து வேண்டுமென்றே யாராவது

மிரட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.