திருக்கோவிலூர்:அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் திருக்கோவிலூரில்
நடைபெறும் தேர்வுக்கான ஆயத்த பணிகள் குறித்து அதிகாரிகளுடன் சப் கலெக்டர்
ஆனந்த் ஆலோசனை நடத்தினார்.
அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஜூலை 7ம் தேதி குரூப் 4 தேர்வு
நடக்கிறது. திருக்கோவிலூர் வட்டத்தை சேர்ந்த 4,300 பேர்களும், விழுப்புரம்
வட்டத்தை சேர்ந்த 900 பேர்களும் திருக்கோவிலூர் பகுதிகளில் 15 மையங்களில்
தேர்வு எழுதுகின்றனர்.இங்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்வதை உறுதி செய்வது
குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் தாலுக்கா
அலுவலகத்தில் நடந்தது. சப் கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார்.
தாசில்தார்
கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.தேர்வு மையங்களின் முதன்மை
கண்காணிப்பாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள்,
மின்வாரியம் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
அனைத்து தேர்வு மையங்களிலும் அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்றி தேர்வை
சிறப்பாக நடத்த அறிவுறுத்தப்பட்டது.
மண்டல துணை தாசில்தார்கள் பழனி, ராஜேந்திரன், தலைமையிடத்து துணை தாசில்தார்
கதிர்வேல், அமலாக்க பிரிவு துணை தாசில்தார் செல்வராஜ், வருவாய் ஆய்வாளர்
ராஜேந்திரன் பங்கேற்றனர்.
