வாழப்பாடி: வாழப்பாடி அருகே காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை, கத்தியால்
குத்திக் கொலை செய்ய முயற்சித்த கல்லூரி மாணவரை, போலீஸார்கைது செய்தனர்.
வாழப்பாடி அடுத்த காரிப்பட்டி, நேரு நகர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி
தர்மலிங்கம்மகள் சுமதி, 17(பெயர் மாற்றப்பட்டுள்ளது). மேட்டுப்பட்டி அரசு
மேல்நிலைப்பள்ளியில், ப்ளஸ் 2 படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த
சுப்பிரமணி மகன் கருப்பண்ணன், 24. அவர், சேலத்தில் உள்ள தனியார்
கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
கருப்பண்ணன், சுமதியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மூன்று மாதத்துக்கு
முன், தன்னிடம் பேச மறுத்த மாணவி சுமதியை தாக்கியதோடு, கொலை மிரட்டல்
விடுத்துள்ளார். அப்போது, கருப்பண்ணனை, காரிப்பட்டி போலீஸார் கைது செய்து,
சிறையில் அடைத்தனர்.
இருபது நாள் சிறைவாசத்துக்கு பின்ஜாமீனில் வெளியே வந்த கருப்பண்ணன்,
காரிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வருகிறார். நேற்று முன்தினம்
மதியம், மளிகை பொருட்கள் வாங்குவதற்கு, காரிப்பட்டிகடைவீதிக்குச் சென்ற
மாணவி சுமதியை, கருப்பண்ணன் வழிமறித்து, தான் வைத்திருந்த கத்தியால்,
வயிற்றிலும், முதுகிலும்குத்திவிட்டு தப்பியோடினார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த மாணவி சுமதியை மீட்ட அவரது உறவினர்கள்,
சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில்,
மாணவி சுமதி சிகிச்சை பெற்று வருகிறார்.
வழக்கு பதிவு செய்த காரிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)
சுரேஷ்குமார், மாணவர் கருப்பண்ணனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.
