கிலானி மீதான வழக்கு:28ம் தேதிக்கு தள்ளி வைப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் கிலானி மீதான கோர்ட் அவமதிப்பு வழக்கை இம்மாதம் 28ம் தேதிக்கு, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்துள்ளது.பாக்., அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீதான ஊழல் வழக்குகளை மீண்டும் நடத்துவது குறித்த வழக்கில், பிரதமர் கிலானி கோர்ட்டின் உத்தரவை செயல்படுத்தவில்லை எனக் கூறி அவரை கோர்ட் அவமதிப்பு குற்றவாளியாக சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது.இந்த அவமதிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும், எனக் கோரிய கிலானியின் மனுவை சமீபத்தில் கோர்ட் நிராகரித்து விட்டது.இவ்வழக்கில் அட்டர்னி ஜெனரல் அன்வர் உல் ஹக், அரசுத் தரப்பு வழக்கறிஞராக செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். இதையடுத்து நேற்று நடந்த விசாரணையில், கிலானிக்கு எதிரான ஆதாரங்களை ஹக் சமர்ப்பித்தார்.அதோடு, ஹக்கை அரசுத் தரப்பு வழக்கறிஞராக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த தாக்கல் செய்யப்பட்ட மனுவை, நீதிபதி நசீர் உல் மாலிக் தலைமையிலான ஏழு பேர் கொண்ட பெஞ்ச் நிராகரித்தது. தொடர்ந்து வழக்கை இம்மாதம் 28ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.