‘ கொள்ளைக்கார எம்.பி.,க்கள் ’- கோபமுற்ற கட்சிகள்; கெஜ்ரிவால் வர்ணனைக்கு வந்தது எதிர்ப்பு

நொய்டா: நாட்டை ஆளும் எம்.பி.,க்கள் பலரும் கொள்ளைக்காரர்களாகவும், கற்பழிப்பு வழக்கில் சிக்கியவர்களாகவும் இருந்து வருகின்றனர் என்று அன்னா ஹசாரே குழுவில் இடம்பெற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் , பேசியதற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உ .பி., மாநிலம் நொய்டாவில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய கெஜ்ரிவால்; இந்த நாட்டில் நமது மக்கள் ஊழலை ஒழிக்க பெரும் பாடு பட வேண்டியது இருக்கிறது. பார்லியில் உள்ளவர்களின் கேரக்டர் மிக மோசமாக இருக்கிறது. நாட்டின் வளர்ச்சி குறித்து யாரும் கவலை கொள்வதில்லை. காங்கிரஸ் கட்சியால் ஊழலை ஒழிக்க முடியாமல் திணறி வருகிறது.
நல்ல உள்ளம் படைத்தவர்களை மக்கள் தேர்வு செய்ய வேண்டும். இந்த நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஊழல் கறை படிந்ததாக இருக்கிறது. எம்.பி.,சீட் மூலம் கொள்ளையடிக்க முயற்சிக்கின்றனர். கொள்ளைக்கார எம்.பி.,க்கள் , கற்பழிப்பு வழக்கில் சிக்கியவர்கள் அகற்றப்பட வேண்டும். மக்கள் கவனத்துடன் ஓட்டளிக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

பா.ஜ., காங்., கம்யூ கட்சி எதிர்ப்பு: இவரது பேச்சுக்கு பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஜாவேட்கர் கூறுகøயில் ; கெஜ்ரிவால் பேசியது கண்டிக்கத்தக்கது, இது துரதிருஷ்டமானது. இவ்வாறு பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை. இந்திய கம்யூ., கட்சி தலைவர்களில் ஒருவரான குருதாஸ் குப்தா கூறுகையில்: இவரது பேச்சு அர்த்தமற்றது. அதே நேரத்தில் இது பார்லி.,யின் பெருமையை இழித்து பேசுவது ஆகும் என்றார். காங்., செய்தி தொடர்பாளர் ரஷீத் ஆல்வி கூறுகையில்: இது பார்லி.,க்கு எதிராக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. பார்லி.,யை அவமதிக்கும் வகையில் இந்த பேச்சு ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் வகையில் உள்ளது. மேலும் இது சுய விளம்பரத்திற்காக இவ்வாறு பேசியிருக்கிறார் என்றார்.