தேடல்

"கோவையில் இருந்து வந்தேன்' போலீசாரை தலை சுற்ற வைத்த சிறுமி

செங்குன்றம் : கோவையில் இருந்து கோவில் திருவிழாவிற்கு அழைத்து வந்த அப்பா, பஸ் நிலையத்தில் அனாதையாக விட்டுச் சென்றதாக, போலீசாரை அலைக்கழித்த சிறுமி, மாலையில் தாயிடம் ஒப்படைக்கப்பட்டார்.பஸ் நிலையத்தில். சென்னை செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் இந்திரா நகரை சேர்ந்தவர் அலமேலு. இவரது மூத்த மகள் நிலா,11, (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நேற்று காலை செங்குன்றம் பஸ் நிலையத்தில் பரிதாபமாக நின்றிருந்தார். ஒருவர், சிறுமியை செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில் அவர் கூறியதாவது: தந்தையின் பெயர் பிரபு. அவர் கட்டட தொழிலாளி. நாங்கள் கோவையைச் சேர்ந்தவர்கள். நான் அங்குள்ள அரசு பள்ளியில், ஆறாம் வகுப்பும் எனது ஒரே தங்கை, நான்காம் வகுப்பும் படிக்கிறோம்.கோவில் திருவிழாவிற்காக பொன்னேரியில் உள்ள மாமா வீட்டிற்கு வந்தோம். மீண்டும் ஊருக்கு செல்ல பஸ்சுக்கு காத்திருந்த போது, அப்பா என்னை விட்டுச் சென்று விட்டார்.இவ்வாறு அவர் தெரிவித்தார். பொய் தகவல் அப்பா மற்றும் மாமாவின் அலைபேசி எண்கள் என்று அச்சிறுமி தெரிவித்த எண்களை போலீசார் தொடர்பு கொண்ட போது, இணைப்பு கிடைக்கவில்லை. காலையில் சிற்றுண்டி, பகல் சாப்பாடு ஆகியவற்றை வாங்கிக் கொடுத்த போலீசார், சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தனர்.மீண்டும் விசாரணைமாலையில் மீண்டும் போலீசார் விசாரித்தனர். அப்போது, அச்சிறுமி செங்குன்றம் அருகே பம்மதுகுளத்தில் தனது வீடு இருப்பதாகத் தெரிவித்தாள்.இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சிறுமியின் தாயைக் கண்டு பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவர் கடந்த சில தினங்களுக்கு முன் பிரிந்து சென்றது தெரிந்தது. செங்குன்றம் தனியார் பள்ளியில் படித்த சிறுமி கட்டணம் செலுத்த முடியாததால், இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.இந்த ஆண்டு, அதே பகுதியில் உள்ள, அரசு பெண்கள் பள்ளியில் சேர்ப்பதற்காக, அவரது அம்மா நேற்று காலை நிலாவை அழைத்து வந்துள்ளார். தலைமை ஆசிரியர் வராததால், மறுநாள் வருமாறு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அங்கு படிக்க விரும்பாத சிறுமி, வீட்டிற்கு திரும்பிச் சென்ற போது, அம்மாவை பிரிந்து செங்குன்றம் பஸ் நிலையத்தில் நின்றது தெரியவந்தது.