சச்சின் ஓய்வு பெற வேண்டுமா: வாசகர்களே கருத்து தெரிவியுங்கள்...!

சர்வதேச அளவில், 100வது சதம் அடிக்க வேண்டும் என்பதற்காக 11 மாதங்களாக தவமிருக்கிறார் சச்சின். 2011, மார்ச் 12ம் தேதி நடந்த உலக கோப்பை தொடரில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 99வது சதம் அடித்தார். இதற்கு பின் 21 டெஸ்ட் இன்னிங்ஸ், 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இவரால், சதத்தில் சதம் காண முடியவில்லை. 100வது சத நெருக்கடி, இந்திய அணியின் செயல்பாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து 8 டெஸ்ட் தோல்விகளை சந்தித்தது.

சமீப காலமாக ஒருநாள் போட்டிகளை புறக்கணித்து வந்த சச்சின், தற்போதைய முத்தரப்பு தொடரில் 100வது சதம் அடிக்க வேண்டும் என்ற சுயநல நோக்கில் பங்கேற்பதாக புகார் எழுந்துள்ளது. இவருக்கு வாய்ப்பு வழங்குவதற்காகவே சேவக், காம்பிர் உள்ளிட்ட டாப்-ஆர்டரில் தேவையில்லாமல் சுழற்சி முறையை பின்பற்ற வேண்டியுள்ளது. கிரிக்கெட் அரங்கில் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் நிகழ்த்தியுள்ள சாதனைகள் ஏராளம். டெஸ்டில் அதிக ரன்(15,470) அதிக சதம்(51), ஒருநாள் போட்டியில் அதிக ரன்(18, 176), அதிக சதம்(48), இரட்டை சதம்(200) என சாதனைப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவரைப் போன்ற மகத்தான வீரருக்கு 100வது சதம் அடித்தால் தான் மதிப்பு கிடைக்குமா? இவர், உலக கோப்பை வென்ற கையுடன் கவுரவமாக ஓய்வு பெற்றிருக்கலாம், என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான் கான், பிள்ளையார் சுழி போட்டார். இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் ஓய்வு பெறலாமே என்று பிரபல கிரிக்கெட் விமர்சகர் ஜேமி ஆல்டரும் விமர்சித்துள்ளார்.

மும்பை வீரர்கள், தாமாகவே ஓய்வு பெறாமல் அணியில் ஒட்டிக் கொண்டிருப்பர் என்ற விமர்சனம் உண்டு. இவர்களது வரிசையில் 23 ஆண்டுகளாக விளையாடி வரும், 38 வயதான சச்சினும் சேர்வாரா அல்லது விடைபெறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதற்கிடையில் சச்சின் ஓய்வு பெறலாமா என்ற கேள்விக்கு, வாசகர்களே, நீங்கள் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்களேன்...!