தேடல்

சபாரி உடையில் தனி படை: கருணாநிதி, ஸ்டாலினுக்கு தயார்

தி.மு.க., பொதுக்கூட்டங்கள், கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க, தி.மு.க., தலைவர் கருணாநிதி செல்லும் போது, அவருக்கு தொண்டர் அணியினர் சார்பில், பாதுகாப்பும், வரவேற்பும் அளிப்பது வழக்கம். தற்போது, தொண்டர் அணியில் இருக்கும் பாதுகாவலர்கள் பலருக்கு வயதாகி விட்டது. சிலர் சரிவர பணியில் ஈடுபாடு காட்டாமல் உள்ளனர். இதனால், ஆர்வத்துடனும், ஆஜானபாகுவான உடல் அமைப்புடனும் உள்ள இளைஞர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு சபாரி உடை வழங்கி, கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி, கனிமொழி போன்ற முக்கிய பிரமுகர்களுக்கு, சபாரி உடை அணிந்த இளைஞர் படையினரை, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த, ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இளைஞர் அணியில் உள்ள சில இளைஞர்களை, நேரடியாக ஸ்டாலின் தேர்வு செய்துள்ளார். சமீபத்தில், புரசைவாக்கம் பொதுக்கூட்டத்தில் கருணாநிதியை வரவேற்க வந்த தொண்டர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். அவர்களை ஒழுங்குப்படுத்துவதற்கான பணிகளை, தொண்டர் அணியினர் சரிவர செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. முதல்வர் ஜெயலலிதா, கட்சி ஆபீசுக்கும், தேர்தல் சுற்றுப்பயணம் செல்லும் போதும், சபாரி உடை அணிந்த கட்சியினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். அதேபாணியில், தி.மு.க.,விலும் சபாரி உடை இளைஞர் அணி பாதுகாப்புப் படையினர் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில், கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் பாதுகாப்பு போலீஸ் படை வீரர்களுடன், சபாரி உடை இளைஞர் அணி பாதுகாப்புப் படையினரும் வலம் வரவுள்ளனர்.

- நமது நிருபர் -