சென்னை: நாளை முதல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு இரண்டு மணி நேரமும், மற்ற பகுதிகளுக்கு நான்கு மணி நேரமும் மின்வெட்டு அமலாகும். தொழிற்சாலைகளுக்கு மார்ச் முதல், வாரம் ஒரு நாள் மின்சார விடுமுறை அளிக்கப்படும், என, தமிழக மின் வாரியம் அறிவித்துள்ளது.
தமிழக மின் வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் மின் தேவையின் அளவு, 11 ஆயிரத்து 500லிருந்து, 12 ஆயிரத்து 500 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. தமிழக மின் நிலையங்கள், மத்திய தொகுப்பு மற்றும் இதர இனங்களிலிருந்து, 8,500 மெகாவாட் மின்சாரம் தான் கிடைக்கிறது. ஏற்கனவே நடைமுறையிலுள்ள மின் உபயோகக் குறைப்பு மற்றும் கட்டுப்பாடு முறைகளால், தற்போது நிலவும் இடைவெளியை சீர் செய்ய இயலாத நிலையில், அறிவிப்பிற் கும் அதிகமான மின்வெட்டை கையாள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
கூடங்குளம் தாமதம்: மாநிலத்தின் மின்தேவை, 10 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மேட்டூர் அனல்மின் நிலையம் - 600 மெகாவாட், வள்ளூர் கூட்டு மின் திட்டம் - 1,500, வடசென்னை அனல் மின் திட்டம் - 1,200, கூடங்குளம் மின் திட்டம் - 2,000 மற்றும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி மின் திட்டம் - 500 மெகாவாட் ஆகியவை, இந்த ஆண்டு வந்திருக்க வேண்டும். பல்வேறு காரணங்களால் தாமதமாவதால், இந்த இடைவெளி தவிர்க்க முடியாததாகி விட்டது. ஆகவே, அடுத்து வரும் சில மாதங்களுக்கு, இந்த இடர்ப்பாடுகள் தொடரக்கூடிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஐந்து அம்சம்: ஆகவே, பல தரப்பினர் அளித்த யோசனைகளின் பேரில், அவற்றை செயல்படுத்தும் வழி வகைகளை கருத்தில் கொண்டு, சில மின் வினியோக கட்டுப்பாட்டு முறைகள் அமலுக்கு வருகின்றன. இவற்றில் பல, ஏற்கனவே 2008ல் அமலில் இருந்தவையே. வரும் 27ம் தேதி முதல், பின்வரும் நடைமுறைகள் அமலுக்கு வரும்.
* தொழிற்சாலை மற்றும் வணிக மின் பயனீட்டாளர்களுக்கு, 40 சதவீத மின்வெட்டு.
* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு, 2 மணி நேர மின் தடை.
* நகர மற்றும் ஊரகப் பகுதிகளுக்கு, 4 மணி நேர மின் தடை.
* வணிக பயனீட்டாளர்களுக்கு, மாலை 6 முதல், 10 மணி வரை மின் பயனீட்டு கட்டுப்பாடு.
* தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒரு நாள் மின்சார விடுமுறை. இதில், தொழிற்சாலைகளுக்கான மின்சார வார விடுமுறை, வரும் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
ஜூன் வரை: இந்த மின் கட்டுப்பாட்டு முறைகள், மின் தேவையின் இடைவெளியை பொறுத்து, அவ்வப்போது மாற்றி அமைக்கப்படும். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு, தேர்வு நேரங்களில் முடிந்த அளவுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க வழி வகை செய்யப்படும். மின்னூட்டி வாரியான மின் நிறுத்தம் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பை, அந்தந்த மண்டல தலைமை பொறியாளரோ அல்லது அந்தந்த பகுதி மின் வாரிய அலுவலர்களோ தெரிவிப்பர். இந்த இடர்ப்பாடுகள், அடுத்த சில மாதங்களுக்கு நீடிக்கும். வரும் ஜூன் முதல், காற்றாலை மின் உற்பத்தி மற்றும் புதிய மின் திட்டங்களில் உற்பத்தி துவங்கும் என்பதால், இந்த கட்டுப்பாடுகளில் சில தளர்த்தப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
