தேடல்

சி.பி.ஐ.,க்கு அனுப்பினார் ராணுவ தளபதி சிங்புகார் மனு! ரூ.14 கோடி லஞ்சம் கொடுக்க முன்வந்த விவகாரம்

புதுடில்லி:ராணுவ வாகன கொள்முதலில் லஞ்ச பேரம் பேசப்பட்டது குறித்த விவகாரத்தில், ராணுவத் தளபதி வி.கே.சிங்., நேற்று முறைப்படி சி.பி.ஐ., க்கு புகார் மனு அனுப்பினார். ராணுவத் தளபதியிடம் இருந்து, புகார் வந்துள்ளதை சி.பி.ஐ.,யும் உறுதி செய்துள்ளது.

ராணுவத் தளபதி வி.கே.சிங்., சமீபத்தில் மீடியாக்களுக்கு அளித்த பேட்டியில், ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். ராணுவத்துக்குத் தேவையான 600 வாகனங்களை, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடம் வாங்கினால், அந்த நிறுவனத்திடம் இருந்து, 14 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுத் தருவதாக, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் என்னை அணுகினார் என்றார்.

புகாருக்கு உள்ளானது டாட்ரா நிறுவனம் என்றும், ராணுவத் தளபதியை அணுகியவர், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி தேஜிந்தர் சிங் என்றும் தகவல் வெளியானது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, இதுபற்றி சி.பி.ஐ., விசாரணைக்கு, ராணுவ அமைச்சர் அந்தோணி உத்தரவிட்டார்.

முறையான புகார்: இது குறித்து, ராணுவத் தளபதி முறையாகப் புகார் அளிக்காததால், அடுத்த கட்டமாக சி.பி.ஐ., தரப்பில் விசாரணை மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது.
இது குறித்து, விரிவான புகார் அளிக்கும்படி, ராணுவத் தளபதிக்கு, சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், லஞ்ச விவகாரம் தொடர்பாக, ராணுவத் தளபதி வி.கே.சிங்., நேற்று முறைப்படி, சி.பி.ஐ.,க்கு புகார் அனுப்பி வைத்தார். இந்த தகவலை சி.பி.ஐ.,தரப்பும் உறுதி செய்தது. இதையடுத்து, ராணுவ வாகன கொள்முதலில் லஞ்ச பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் வழக்கின் விசாரணை, இனி முழு வீச்சில் நடைபெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கில் சாட்சியம் ராணுவத் தளபதி வி.கே.சிங், தனக்கு எதிராக லஞ்ச பேர புகார் தெரிவித்ததை எதிர்த்து, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி தேஜிந்தர் சிங், டில்லி பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில், ஏற்கனவே அவதூறு வழக்கு தொடுத்துள்ளார். வி.கே.சிங்., மட்டுமல்லாமல், துணைத் தளபதி எஸ்.கே.சிங், லெப். ஜெனரல் பி.எஸ்.தாகூர், மேஜர் ஜெனரல் எஸ்.எல்.நரசிம்மன் மற்றும் லெப். கர்னல் ஹிட்டன் சவ்னி ஆகியோரது பெயரையும், தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தன் குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் வகையில், தேஜிந்தர் சிங் சாட்சியம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தவறான குற்றச்சாட்டு;ராணுவத் தளபதி வி.கே.சிங்கிற்கு எதிராக, கடந்த மாதம் 3 முதல் 5ம் தேதி வரை, பல்வேறு விவகாரங்கள் மீடியாக்களில் வெளியாகின. இதிலிருந்து, மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் வகையில், எனக்கு எதிராக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன. இது முற்றிலும் தவறான புகார். இந்த விவகாரம் குறித்து மீடியாக்களுக்கும் தவறான தகவல்களைக் கொடுத்ததாகவும் என் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் இருந்து நான், ஓய்வு பெற்று விட்டேன். எனக்கு மீடியாக்களில் எந்த செல்வாக்கும் இல்லை. இதுவும் முற்றிலும் தவறான புகார்.இவ்வாறு அவர் சாட்சியம் அளித்தார். இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்த விசாரணை, வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ராணுவம் தயார் நிலை:ராணுவத்துக்குத் தேவையான வெடி மருந்துகள், போதிய அளவில் இருப்பு இல்லை என, ராணுவத் தளபதி வி.கே.சிங்., சமீபத்தில் தெரிவித்த குற்றச்சாட்டு, பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதுகுறித்து, ராணுவ அமைச்சர் அந்தோணி நேற்று பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:ராணுவத்துக்குத் தேவையான வெடி மருந்துகள், போதிய அளவில் இருப்பு இல்லை என, கூறப்படுவது வெறும் வதந்தி தான்.

ராணுவம் முழு தயார் நிலையில் உள்ளது என, தற்போது உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். இதற்கு முன்பு இருந்ததை விட, தற்போது ராணுவம் முழு தயார் நிலையில் உள்ளது. ஒரு சில குறைபாடுகள் இருப்பது வழக்கமானது தான். தேவைகளை, நூறு சதவீதம் பூர்த்தி செய்து விட முடியாது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமைக்கு எந்தவித சவால் ஏற்பட்டாலும், அதை எதிர்கொள்வதற்கு, ராணுவம் தயார் நிலையில் உள்ளது.இவ்வாறு அந்தோணி கூறினார்.