சிரியாவில் புதிய அரசியல் அமைப்பிற்கான பொது ஓட்டெடுப்பு: ராணுவ தாக்குதல் தொடர்கிறது

டமாஸ்கஸ்: சிரியாவில், மக்கள் மீதான ராணுவத் தாக்குதல்கள் தொடர்ந்து நடக்கும் நிலையில், நேற்று புதிய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கான பொது ஓட்டெடுப்பு அங்கு நடந்தது.

சிரியாவில், அதிபர் பஷர் அல் அசாத்திற்கு எதிராக, மக்கள் கடந்த 11 மாதங்களாக போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை, ராணுவத் தாக்குதல் மூலம் ஒடுக்குவதற்கு, அசாத் முயல்கிறார்.இந்நிலையில், புதிய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கான பொது ஓட்டெடுப்பு, அரசு அறிவித்தபடி, நேற்று அங்கு நடந்தது. மொத்தம் ஒன்றரைக் கோடி வாக்காளர்களுக்காக, 13 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.நேற்று காலை 7 மணிக்குத் துவங்கிய இத்தேர்தல், இரவு 7 மணிக்கு முடிவடைந்தது. அதே நேரம், எதிர்க்கட்சிகள் இந்தத் தேர்தலை முற்றிலுமாக புறக்கணித்து விட்டன.

இதற்கிடையில், நேற்று முன்தினம், ராணுவம் நடத்திய தாக்குதலில், ஹோம்ஸ் நகரில், 24 பேர் பலியாயினர். ராணுவத்திற்கும் எதிர்த் தரப்பிற்கும் நடந்த மற்றொரு மோதலில், 23 வீரர்கள் கொல்லப்பட்டனர்.இன்னும் மூன்று மாதங்களில், பொதுத் தேர்தல் நடத்துவதற்கு, இப்புதிய அரசியல் அமைப்புச் சட்டம் வழிவகுக்கிறது. ஆனால், பேச்சு சுதந்திரம், அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சித்ரவதைகளைத் தடுத்தல் உள்ளிட்ட, பல்வேறு அம்சங்கள் கொண்ட பழைய அரசியல் அமைப்பையே மதிக்காத அசாத்தின் அரசு, புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை முன்னிறுத்துவது கேலிக் கூத்தானது என, எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.