ஜெனீவா: சிரியாவில் அமைதி ஏற்படுத்துவதற்கான என்னுடைய முயற்சிக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை, என, ஐ.நா., முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னான் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவி விலகக் கோரி, கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கிளர்ச்சியாளர்களை ஒடுக்க, சிரிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். தற்போது கிளர்ச்சியாளர்களுக்கு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மறைமுக ஆதரவு அளித்து வருகின்றன. இதன் காரணமாக, அலெப்போ மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள், நவீன ஆயுதங்களுடன் அரசு படைகளை எதிர்த்து வருகின்றனர். சிரியாவில் நடக்கும் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்க, அரபு நாடுகளின் சார்பில் அமைதி நடவடிக்கை தூதராக, கடந்த பிப்ரவரி மாதம் முதல் கோபி அன்னான் செயல்பட்டார். இதற்கிடையே நேற்று முன்தினம் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இது குறித்து அவர் குறிப்பிடுகையில், சிரியா அதிபர் அமைதித் திட்டத்தை ஏற்றுக் கொள்வதற்காக நான் மேற்கொண்ட முயற்சிக்கு, சர்வதேச சமூகம் எனக்கு போதிய ஆதரவளிக்கவில்லை. இது தொடர்பாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலிலும் ஒத்தக் கருத்து ஏற்படவில்லை, என்றார். சிரியாவில் மோதல் அதிகரித்துள்ள நிலையில் கோபி அன்னான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதற்கு, ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

