சுழற்சி முறை சர்ச்சை: சேவக் ஆவேசம்

பிரிஸ்பேன்: இந்திய அணியின் டாப்-ஆர்டர் வீரர்கள் பீல்டிங்கில் மந்தமாக செயல்படுவதால், சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுவர் என்ற தோனியின் கருத்துக்கு நேற்று மதிப்பு அளிக்கப்படவில்லை. சச்சின், சேவக், காம்பிர் ஆகிய மூவரும் இடம் பெற்றனர்.
இது குறித்து சேவக் கூறியது:
தோனி என்ன சொன்னார் என்று எனக்கு தெரியாது. ஆஸ்திரேலியாவில் அடுத்த உலக கோப்பை தொடர் நடப்பதால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தான் வலியுறுத்தினார். நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக ஒரே மாதிரி தான் பீல்டிங் செய்கிறோம். ஜெயவர்தனா அடித்த பந்தை பறந்து சென்று நான் கேட்ச் பிடித்ததை பார்த்தீர்கள் அல்லவா?
இப்பிரச்னை பற்றி தோனியிடம் நான் பேச வேண்டிய அவசியமில்லை. அவர் தான் அணியின் தலைவர். அவரும் பயிற்சியாளரும் சேர்ந்து டாப்-ஆர்டர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க விரும்பினால், எனக்கு எவ்வித பிரச்னையும் இல்லை. என்னை பொறுத்தவரை அனைத்து போட்டிகளிலும் விளையாட தயாராக இருக்கிறேன்.
நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். கேப்டன் என்ற முறையில் தான் விரும்பியவற்றை தோனி சொல்லலாம். அவர் தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக மீடியாவிடம் பேசி வருகிறார். இதில், எங்களுக்கு சம்மதம் தான்.
இலங்கைக்கு எதிரான போட்டியில் பேட்ஸ்மேன்கள் சோபிக்க தவறினர். எனது ஆட்டமும் சரியில்லை. கடந்த 5 முறை தேர்ட்மேன் அல்லது ஸ்லிப் திசையில் கேட்ச்சாகி அவுட்டாகிறேன். தொடர்ந்து பயற்சி மேற்கொண்டு முன்னேற்றம் காண வேண்டும்.
இவ்வாறு சேவக் கூறினார்.