புதுடில்லி:ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இதை மையமாக வைத்து, அரசியல் களத்தில் பரபரப்பான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.
தற்போதைய ஜனாதிபதி பிரதிபாவின் பதவிக் காலம் முடிவடையவுள்ளதை அடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், அடுத்த மாதம் 19ல் நடக்கிறது. ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். தேர்தலுக்கு குறைந்த கால அவகாசமே உள்ள நிலையில், அரசியல் களத்தில் பரபரப்பான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.
திரிணமுல் எம்.பி., போர்க்கொடி:மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணமுல் காங்., கட்சி, ஜனாதிபதி தேர்தலில் பிரணாபுக்கு எதிராக செயல்பட்டு வரும் நிலையில், அந்த கட்சியைச் சேர்ந்த, கபீர் சுமன் என்ற எம்.பி., தேர்தலில் பிரணாபுக்கு ஆதரவாக ஓட்டளிக்கப் போவதாகக் கூறி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் கூறுகையில், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, என்னிடம் தொலைபேசி மூலமாக பேசினார். உடல் நலம் விசாரித்தார். தேர்தலில் தனக்கு ஆதரவாக ஓட்டளிக்கும்படி, என்னிடம் அவர் கேட்கவில்லை. பிரணாப் முகர்ஜி,ஜனாதிபதிக்கு பொருத்தமான நபர் . தேர்தலில் அவருக்கு ஆதரவாக ஓட்டளிப்பேன் என்றார்.இந்த விவகாரத்தை அடுத்து, திரிணமுல் காங்கிரஸ் கட்சியை உடைக்க, பிரணாப் முயற்சித்து வருவதாக, அக்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அகதாவுக்கு எச்சரிக்கை:ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ், ஜனாதிபதி தேர்தலில் பிரணாபை ஆதரிக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்து விட்டது. அந்த கட்சியின் மூத்தத் தலைவரான சங்மா, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு, கட்சி மேலிடம் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, நேற்று அவர் கட்சியில் இருந்து விலகினார்.சங்மாவின் மகள் அகதா சங்மா, தேசியவாத காங்கிரசின் லோக்சபா எம்.பி.,யாக பதவி வகித்து வருகிறார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், தன் தந்தைக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இதற்கு, காங்., கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, தேசியவாத காங்., கட்சி, நேற்று வெளியிட்ட அறிக்கையில், கட்சி கட்டுப்பாட்டை மீறி, தன் தந்தைக்கு ஆதரவாக ஓட்டுச் சேகரித்தால், அகதா சங்மா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது, மத்திய அமைச்சரவையிலும், அவர் அங்கம் வகிப்பதால்,அமைச்சரவையின் ஒழுங்கு நடவடிக்கைக்கும், அவர் ஆளாக நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிராகரிப்பு:ஜனநாயக சீர்திருத்த அமைப்பு சார்பில், தேர்தல் கமிஷனில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவோர், தங்களின் சொத்து மற்றும் குற்றப் பின்னணி குறித்த தகவல்களை, தாக்கல் செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த கோரிக்கையை, தேர்தல் கமிஷன் நிராகரித்து விட்டது. இதுகுறித்து, தலைமை தேர்தல் கமிஷன், ஜனநாயக சீர்திருத்த அமைப்புக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவோரிடம், சொத்துப்பட்டியல் போன்ற விவரங்களை தாக்கல் செய்யும்படி, நாங்கள் கேட்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

