தேடல்

ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் வெற்றிபெற மகள் பிரார்த்தனை

திருச்சி: தனது தந்தை பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக, அவரது மகள் சவுமிஸ்தா நேற்று ஸ்ரீரங்கம், சமயபுரம் கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
இந்தியாவின் ஜனாதிபதிக்கான தேர்தலில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆதரவில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, பாரதிய ஜனதாக்கட்சி ஆதரவுடன், முன்னாள் சபாநாயகர் சங்மா போட்டியிடுகிறார்.சங்மாவை தமிழகத்தில் ஆளும்கட்சியான அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் ஆதரிக்கின்றன. ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜியின் வெற்றி உறுதி என்றாலும், சிலர் தங்களின் ஆதரவை இதுவரை தெரிவிக்காத காரணத்தால், கடைசி நேரத்தில் மாறுதல்கள் வரலாம் என்று எதிர்பார்ப்புள்ளது.இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜியின் மகள் சவுமிஸ்தா நேற்று காலை ஒன்பது மணிக்கு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சாமிகும்பிட வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில், வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின் அவர் தனது தந்தை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, ஸ்ரீரங்கம் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை செய்தார். அங்கிருந்து திருவானைக்காவல், சமயபுரம் ஆகிய கோவில்களுக்கும் சென்று, தந்தை பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறவேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்தார்.பின் மதியம் சிறிதுநேரம் சங்கம் ஹோட்டலில் ஓய்வெடுத்துவிட்டு, நேற்று மதியம் 3.55 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் சவுமிஸ்தா சென்னை புறப்பட்டு சென்றார்.இதுவரை ஆதரவு தெரிவிக்காத திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி திடீரென நேற்று பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.