ஜீன்பூல் தாவர மையத்தில் வனத்தீ : கட்டுப்படுத்த வனத்துறை தவிப்பு

கூடலூர் :கூடலூர் ஜீன்பூல் தாவர மையத்தில் ஏற்பட்ட வனத் தீயில் பல ஏக்கர் பரப்பு புல்வெளிகள் எரிந்து நாசமானது; பறவைகள் கூடுகளை இழந்து புகை மண்டலத்தில் உயிருக்கு போராடின.
நீலகிரி மாவட்டம் கூடலூர் நாடுகாணி ஜீன் தாவர மையத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியால் அடிக்கடி வனத்தீ ஏற்பட்டு வருகிறது. நேற்று பிற்பகல் 1.00 மணி அளவில் குடோன் அருகே வனத்தீ கொழுந்து விட்டு எரிய துவங்கியது.
தகவல் அறிந்த கூடலூர் உதவி வன பாதுகாப்பாளர் காலைராஜன் தலைமையில் வனச் சரகர் இளஞ்சேரன், வனவர் ராமகிருஷ்ணன் மற்றும் வன ஊழியர்கள், தீ தடுப்பு காவலர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
வனத்தீ ஏற்பட்ட பகுதியில் நூற்றுக்கணக்கான பறவைகள் கூடுகளை இழந்து, புகை மண்டலத்தில் உயிருக்கு போராடின. பறவைகளின் முட்டைகள், குஞ்சுகள் தீயில் சாம்பலாயின. நேற்று கடும் வெயிலான காலநிலை நிலவியதால், வனத்தீயை கட்டுபடுத்த முடியாமல் வனத்துறையினர் திணறினர். தீயால் பல ஏக்கர் பரப்பு புல்வெளிகள் நாசமாயின.
உதவி வனப் பாதுகாவலர் காலைராஜன் கூறுகையில், வனத்தீயை கட்டுப்படுத்த தொடர்ந்து போராடி வருகிறோம். வனத்தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். இப்பகுதியில் வனத் தீ ஏற்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.