ஜிப்மரில் 40 செவிலியர் பணிக்கு எழுத்து தேர்வு: 6,498 பேர் எழுதினர்

புதுச்சேரி:ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது.

ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள 40 செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக நிர்வாகம் அறிவித்திருந்தது. இதன்படி, காலியாக உள்ள பணியிடங்களுக்கு, இந்தியா முழுவதிலுமிருந்து டிப்ளமோ நர்சிங், பி.எஸ்.சி., நர்சிங் படித்த 7 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. ஜிப்மர் பயிற்சி வளாகம், பெத்தி செமினார் பள்ளி, செல்ல பெருமாள்பேட்டை விவேகானந்தா பள்ளி, பாரதிதாசன் மகளிர் கல்லூரி, இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி, இந்திராகாந்தி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் நடந்த எழுத்து தேர்வில், 6 ஆயிரத்து 498 பேர் பங்கேற்றனர்.
ஜிப்மர் மருத்துவமனை பதிவாளர் ஜேம்ஸ் சேகர் தலைமையில், அதிகாரிகள் மேற்பார்வையிட்டனர்.