தேடல்

டவுட்' தனபாலு

பிரதமர் மன்மோகன் சிங்: அசாமில் ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில், 77 பேர் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது. வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு சார்பில், 500 கோடி ரூபாய் வழங்கப்படும். சேதம் குறித்து மத்திய குழு அறிக்கை தாக்கல் செய்த பின், கூடுதல் நிதி உதவி குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும்.

டவுட் தனபாலு: எங்க ஊர், நிஷா, தானே புயல் பாதிப்புகளுக்கும் இப்படித் தான் முதல் கட்டமா, 500 கோடியை கொடுத்துட்டு, அப்படியே கைகழுவிட்டீங்க... உங்களை ராஜ்யசபா எம்.பி.,யாக்குன அசாம் மாநிலத்துக்காகவது, அல்வா கொடுக்காமமுடிஞ்ச உதவிகளை செய்யுங்க...!

பத்திரிகை செய்தி: ரவுடிகள், கந்துவட்டி, நிதி நிறுவன மோசடி குற்றவாளிகள் பட்டியல் தயாரித்து, அவர்களில் மிக மோசமானவர்களை, குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க வேண்டும் என, எஸ்.பி.,க்களுக்கு தென்மண்டல, ஐ.ஜி., ராஜேஷ்தாஸ் உத்தரவிட்டுள்ளார்.

டவுட் தனபாலு: மோசமானவங்கள்லயும் முக்கியமானவங்களை மட்டும் பிடிக்கச் சொல்றாரா...? எரியுற கொள்ளியில எது நல்ல கொள்ளி... எல்லா குற்றவாளிகளையும் பிடிச்சு, உள்ளே போட்டா என்ன தப்புங்கிறது தான் என்னோட, டவுட்!

பாக்., முன்னாள் அதிபர் முஷாரப்: அரசியல் குளறுபடிகள், நீதிமன்றம், ராணுவம் மற்றும் அரசுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள், பிணக்குகளால் பாகிஸ்தான் அரசு பாதிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து நாம் நாட்டை காக்க வேண்டும். இந்த ஆண்டு நிச்சயம் பாகிஸ்தான் திரும்புவேன்.

டவுட் தனபாலு: உங்க நாட்டுல, உங்களையே பாதுகாத்துக்க முடியாம தான் வெளிநாட்டுல போய் அடைக்கலம் புகுந்திருக்கீங்க... இதுல, பாகிஸ்தானை எங்க இருந்து காப்பாத்த போறீங்கங்கிறது தான் என்னோட, டவுட்!