தேடல்

டீ கடை பெஞ்சு

க்யூவில் இன்னொரு அமைச்சர்!

அடுத்து ஒரு அமைச்சரும், புகாரில் சிக்கி இருக்கார் ஓய்... என, பரபரப்பான தகவலுடன், நாயர் கடை பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.

என்னாச்சு பா இன்னிக்கு... எடுத்த எடுப்பிலேயே சூடு பறக்குது... எனக் கேட்டார் அன்வர்பாய்.

மாஜி அமைச்சர் செங்கோட்டையன் பி.ஏ.,வா, ஆறுமுகம் இருந்தார் இல்லையா... அவரை, செங்கோட்டையனுக்கு அறிமுகம் செஞ்சதே,பழனியான அமைச்சர் தான்... ஆறுமுகத்தோட அண்ணன் ராஜா, சேலத்தில், மகுடஞ்சாவடி ஒன்றிய செயலரா இருக்கார்... இந்த விவரம், தலைமை காதுக்கு எட்டிடுத்து... அதனால, அந்த அமைச்சரோட, மாவட்டச் செயலர் பதவியைப் பறிச்சுட்டு, மாவட்டத்தை, கிழக்கு, மேற்குன்னு ரெண்டா பிரிச்சு, தனித் தனியா மாவட்டச் செயலர்களை நியமிக்கப் போறா ஓய்... எனக் கூறி முடித்தார்.

அப்ப, அ.தி.மு.க.,ல மறுபடி ஒரு, அதிர்வு இருக்குன்னு சொல்லு பா... எனக் கூறி, கீரை வடையைச் சுவைக்கத் துவங்கினார் அன்வர்பாய்.

கட்சியோட அந்த மூத்த பெண் தலைவரை, ஒருவழியா சமாதானப்படுத்திட்டாவ வே... என, அடுத்த தகவலைத் துவக்கினார் அண்ணாச்சி.

எந்தக் கட்சி ஓய்... இப்ப தானே, அ.தி.மு.க., வௌகாரம் ஒண்ணு சொன்னேன்... எனக் கேட்டார் குப்பண்ணா.

இது தி.மு.க.,வைப் பத்தினது... டெசோ மாநாட்டுல, தமிழீழத்தைப் பத்தி தீர்மானம் போட மாட்டேன்னு, தலைவர் கருணாநிதி அறிவிச்சாருல்லா... அதனால, மாநாடு கமிட்டி உறுப்பினரா இருந்த, அந்த மூத்த பெண் தலைவரு, எக்கச்சக்கமாய் கோவப்பட்டு, எனக்கு கமிட்டி உறுப்பினர் பதவியே வேண்டாம்ன்னு ஒதுங்கிட்டாவ...

இதைக் கேள்விப்பட்ட தலைமை, மாநாடு முடியற வரை, அமைதியா இருங்கன்னு சொல்லி, அவரைச் சமாதானப்படுத்திட்டு... அவுகளும் அதுக்கு சம்மதிச்சு, அடங்கிட்டாவவே... எனக் கூறிய அண்ணாச்சி, நான் இன்னிக்கு, சுப்புலட்சுமியப் போய் பாக்கணும்... என் பேத்திக்கு, அறிவியல் பாடம் நடத்துவாகளான்னு கேக்கோணும்... என, முன்னர் கூறிய செய்திக்குத் தொடர்பில்லாமல் ஏதோ கூறினார்.

வடையைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த அன்வர்பாய், விஞ்ஞான ரீதியாப் பேசத் தெரிஞ்சு வச்சிருக்கே பா... என்றார்.

மாநகராட்சிகள்ல குடுமிப்பிடி சண்டை நேரம் போலிருக்கு பா... என, கடைசி மேட்டரைச் சொன்னார் அன்வர்பாய்.

ஆமாங்க... கொஞ்ச நாளாவே மாநகராட்சிகள்ல பிரச்னைன்னு, பேப்பர்ல நியூஸ் வந்திட்டிருக்கு... இப்ப, எந்த மாநகராட்சில பிரச்னை... எனக் கேட்டார் அந்தோணிசாமி.

தூத்துக்குடியில தாம் பா... அங்க, சமீபத்துல, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. தூத்துக்குடியில, பழைய பஸ் ஸ்டாண்டை புதுப்பிக்கணும்ன்னு, கவுன்சிலர்கள் சொன்னாங்க... ஆனா, துணை மேயர் சேவியர், நகருக்கு வெளியே, புது பஸ் ஸ்டாண்ட் கட்டணும்னு சொன்னாரு... மேயர் சசிகலா புஷ்பா,துணை மேயரைப் பார்த்து, இந்த கூட்டத்துல, நீங்க வெறும் உறுப்பினர் மட்டுமே; துணை மேயர் இல்லை... எனக் கூற, துணை மேயர், கோவத்தோட கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செஞ்சிட்டாரு... போறாத குறைக்கு, பதவியை ராஜினாமா செய்யப் போறதாவும் சொல்றாரு... எனக் கூறி முடித்தார் அன்வர்பாய்.

நான்கு பேரும் கிளம்பவே, காலியான பெஞ்சில் மற்றவர்கள் வந்தமர்ந்தனர்!