டாஸ்மாக்கில் போலி, சரக்கா? சர்ச்சையில மந்திரி சிக்கியதும், மாஜி மந்திரிக்கு சந்தோஷம் தாங்கலை ஓய்...! என்று அரசியல் விவகாரத்துடன் பேச்சைத் துவக்கி வைத்தார் குப்பண்ணா.
கொஞ்சம் விவரமா சொல்லும் வே... என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
வனத்துறை மந்திரி பச்சைமாலின் உதவியாளர் சகாயம் சர்ச்சையில சிக்கியிருக்கார் ஓய்... அவர் பி.ஏ., இல்லைன்னு மந்திரி தரப்புல இருந்து சொல்றா... ஆனா, அவர் பச்சைமாலின் பி.ஏ., தான்னு அ.தி.மு.க.,வைச் சேர்ந்த மாஜி மந்திரி ஒருத்தர் கட்சிக்காரங்களை விட்டு எல்லார்கிட்டேயும் சொல்லச் சொல்றாராம் ஓய்... என்றார் குப்பண்ணா.
அதனால, அவருக்கு என்ன லாபம் வே... என்றார் அண்ணாச்சி.
கன்னியாகுமரி மாவட்டத்துல, பச்சைமாலுக்கும், மாஜி மந்திரிக்கும் இடையில கோஷ்டி அரசியல் நடந்துண்டிருக்கு ஓய்... இப்ப, பச்சைமாலின் உதவியாளர் சர்ச்சையில சிக்கியிருக்கறதை பயன்படுத்தி, மந்திரியோட பதவியை காலி பண்ணலாம்னு அந்த மாஜி காய் நகர்த்திட்டிருக்காராம்... என்றார் குப்பண்ணா.
துறை செயலர் ரொம்ப கோபத்துல இருக்காராம் ஓய்... என்று அடுத்த மேட்டரையும் குப்பண்ணாவே ஆரம்பித்தார்.
எந்த துறை செயலர்... எதுக்கு கோபப்படறார்... என்று கேட்டார் அன்வர்பாய்.
போன மாசம் டாஸ்மாக் சரக்கு விற்பனை, போன வருஷம் இதே மாசத்தோட ஒப்பிடறப்ப, லட்சக்கணக்கான பெட்டிகள் குறைஞ்சிருக்கறது தெரியவந்திருக்கு ஓய்... இதனால, கோபமான துறை செயலர், டாஸ்மாக் பொது மேலாளர், நிர்வாக மேலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளை அழைச்சு சமீபத்துல ஆலோசனை நடத்திருக்கார்...
இதன் எதிரொலியா, மூத்த மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்களை அழைச்சு டாஸ்மாக் நிர்வாகம் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்திருக்கு... டாஸ்மாக் கடைகள்ல கூட்டம் களை கட்டிண்டிருக்கு... ஆனா, சேல்ஸ் மட்டும் எப்படி குறையும்னு கேட்டிருக்கா... போலி மதுபான சரக்குகள் விற்பனையாகறதுங்கற சந்தேகத்தை எல்லாரும் எழுப்பிருக்கா... அதனால, தமிழகம் முழுவதும் அதிரடி, ரெய்டு நடத்த முடிவு பண்ணிருக்காளாம்... ஒரு சில இடங்கள்ல இப்பவே ரெய்டை துவக்கிட்டா... என்றார் குப்பண்ணா.
முதல்வரின் பிறந்த நாள் சம்பந்தமா ஏதாச்சும் தகவல் உண்டா பா... எனக் கேட்டார் அன்வர்பாய்.
பிறந்த நாளன்று என்னை சந்திக்க வர வேண்டாம்... எளிமையா கொண்டாடுங்கன்னு முதல்வர் ஏற்கனவே அறிவிச்சுட்டாங்க... ஆனாலும், உற்சாகத்தோட நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ள அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் தயாராகிட்டு இருக்காங்க...
பிறந்த நாளின் போது, முதல்வர் சென்னையில் இருக்க மாட்டாங்க... கோட நாடு போயிடுவாங்கன்னு அதிகாரிகள் தரப்புல சொல்றாங்க... சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் முதல்வர் பிரசாரத்திற்கு போகப் போறதாவும், அதுக்கு தயாராகற வகையில, கோட நாட்டில் ஒரு வாரம் ஓய்வெடுக்கப் போறாங்கன்னும் சொல்றாங்க... என்று விளக்கிவிட்டு கிளம்பினார் அந்தோணிசாமி; அவரை மற்றவர்களும் தொடர, பெஞ்சில் அமைதி திரும்பியது.
