சேலம்: சேலம் அருகே, நேற்று மாலை டேங்கர் லாரியும், சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 23 பேர் படுகாயமடைந்தனர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா கவுண்டம்பட்டியைச் சேர்ந்த
கரும்பு வெட்டும் தொழிலாளர்கள், நேற்று சேலம் மாவட்டம் சுக்கம்பட்டி
பகுதிக்கு வந்து வேலை பார்த்துவிட்டு, மாலையில் வீடு திரும்புவதற்கு
பஸ்சுக்காக காத்திருந்தனர். அந்த வழியே வந்த பஸ்கள் நிற்காமல் சென்றதால்,
பின்னால் வந்த லாரியை நிறுத்தி, அதில் 20 தொழிலாளர்கள்
ஏறினர்.மஞ்சவாடிகணவாய் அருகில் லாரி சென்ற போது, எதிரே வந்த டேங்கர் லாரி
மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில், திருவண்ணாமலை மாவட்டம்,
போளூரைச் சேர்ந்த டேங்கர் லாரி டிரைவர் சீதாராமன், கிளீனர் விஜயன் ஆகியோர்
படுகாயமடைந்தனர். அதேபோல், சரக்கு லாரி டிரைவர் களம்பூரைச் சேர்ந்த காந்தி
மற்றும் லாரியில் பயணம் செய்த, கவுண்டம்பட்டியைச் சேர்ந்த வஜ்ரம், வசந்தி,
ராமசாமி, சென்னம்மா, ரவி, குப்பம்மாள், வெங்கடாசலம், மாது, தீர்த்தகிரி,
கற்பகம் உள்ளிட்ட 21 பேர் காயமடைந்தனர்.தகவல் அறிந்து வந்த வீராணம்
போலீஸார், காயமடைந்தவர்களை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்த சம்பவத்தால், சேலம் - அரூர் சாலையில் போக்குவரத்து பாதிப்படைந்தது.
