புதுடில்லி:
டில்லியில் நடந்த பாதி மாரத்தான் ஓட்டத்தில் அசத்தினார் மாற்றுத்திறனாளியான ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் தேவேந்தர் பால் சிங்.கடந்த 1999ல் நடந்த கார்கில் போரில் தனது வலது காலை இழந்தார் தேவேந்தர். இதற்கு பின் ஓட்டத்தில் நாட்டம் கொண்டார். தென் ஆப்ரிக்காவின் பிஸ்டோரியஸ் போல நவீன முறையில் செயற்கை கால் பொருத்திக் கொண்டு ஓடினார். இதன் மூலம் இந்தியாவின் முதல் பிளேடு ரன்னர் என்ற பெருமை பெற்றார்.
நேற்று டில்லியில் நடந்த பாதி மாரத்தானில் பங்கேற்ற இவர், போட்டி தூரத்தை(21.097 கி.மீ.,) 2 மணி நேரம் 45 வினாடிகளில் கடந்து சாதித்தார். இதற்கு முன் மும்பை பாதி மாரத்தானில் ஓடிய இவர், 3 மணி நேரம் 15 நிமிடங்கள் எடுத்துக் கொண்டார்.
இது குறித்து தேவேந்தர் கூறுகையில்,எனது வலது காலை அகற்றப் போவதாக டாக்டர்கள் கூறிய போது, ஒரு நொடி கூட மனம் உடைந்து போகவில்லை. இதனை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டேன். அடுத்து முழு மாரத்தான், பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று, திறமை நிரூபிக்க காத்திருக்கிறேன்,என்றார்.
