மேலூர்: போக்குவரத்து நெரிசல்மிக்க ரோட்டில், நெடுஞ்சாலை துறை ஒத்துழைப்பு
இல்லாததால், கால்வாய்ப் பணிகள் பாதியில் நிற்பதாக, நகராட்சியினர்
குற்றம்சாட்டுகின்றனர். மேலூரில் முக்கிய ரோடுகளில், மழைநீர் கால்வாய்
கட்டும் பணி சில மாதங்களாக நடக்கிறது. பஸ்ஸ்டாண்ட் முன்பு பணிகள் நடந்தபோது
கழிவு நீர் ரோட்டில் தேங்கி வாகன ஓட்டிகளை சிரமப்படுத்தியது. பின் சரி
செய்யப்பட்டது. தற்போது பாங்க் ரோடு பகுதியில் இருந்து செக்கடி வரை, பணிகளை
மேற்கொள்ள ஜூன் 15ல் பள்ளம் தோண்டப்பட்டது.
இது வரை பணிகள் நடைபெறவில்லை.
ரோட்டோரம் இருந்த கடைக்காரர்கள், தற்காலிக பாலம் அமைத்து வியாபாரத்தை
கவனித்தனர். கட்டுமான பணிகள் பாதியில் நின்றதால், வடிகால் பகுதியில்
சாக்கடை கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி கமிஷனர் பாஸ்கர
சேதுபதி கூறியதாவது: அரசு இடம் துவங்கும் பகுதியில் கால்வாய் கட்டினால்,
மீண்டும் ஆக்கிரமிப்பு செய்ய இயலாது. தற்போது நடைபெறும் பணி நெடுஞ்சாலை
துறையை சேர்ந்தது. அவர்கள் தங்கள் இடத்தை, அளந்து கொடுத்தால், ஒரே
வாரத்தில் பணிகள் முடிந்துவிடும். இதுகுறித்து கடிதம் மூலமும்,
நேரடியாகவும் தகவல் கொடுத்தும் ஒத்துழைப்பு தர மறுக்கின்றனர், என்றார்.
