சென்னை: பி.எஸ்.என்.எல்.,லின், வை-மேக்ஸ் சேவையை, ஸ்டார்நெட் நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக, சி.பி.ஐ., சார்பில் நேற்று புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, நாடு முழுவதும்பி.எஸ்.என்.எல்., அலுவலகங்கள் மற்றும் ஸ்டார்நெட் நிறுவன அதிகாரிகள் வீடுகளில், நேற்று சோதனை நடத்தப்பட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை தொடர்ந்து, தற்போது புதிய பூதம் கிளம்பியுள்ளது.
கம்பியில்லா முறையில், இணைய சேவை அளிக்கும் நான்காவது தலைமுறையைச் சேர்ந்த தொழில்நுட்பம் வை-மேக்ஸ். கம்பி மூலம் இணைப்பு வழங்க முடியாத இடங்களில் இணைய சேவையை விரிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில், கோபுரங்கள் அமைக்கப்பட்டு, இச்சேவையை நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல்., அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த சேவையை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக, சில தனியார் நிறுவனங்கள், கிளை நிறுவனங்களாக (பிரான்சைஸ்) தேர்வு செய்யப்பட்டன.
அறிக்கையில் திருத்தம்: டில்லி, கோல்கட்டா, சென்னை, குர்கான் ஆகிய பகுதிகளுக்கு இந்த சேவையை வழங்குவதற்கு, ஸ்டார்நெட் கம்யூனிகேஷன் நிறுவனத்துடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதற்கான உரிமத்தை பெறுவதற்காக, தன் வரவு - செலவு அறிக்கையை திருத்தி வெளியிட்டு, ஸ்டார்நெட் நிறுவனம் விண்ணப்பித்திருந்ததாக கூறப்பட்டது. வை-மேக்ஸ் சேவையை வழங்கும் கிளை நிறுவனங்களின் மொத்த வர்த்தகம், ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கு அதிகமாக இருக்க வேண்டும் என நிபந்தனை உள்ளது. இதற்காக, வரவு - செலவு அறிக்கையை ஸ்டார்நெட் நிறுவனம் திருத்தியதாகக் கூறப்பட்டது. எனவே, வை-மேக்ஸ் சேவையை ஸ்டார்நெட் நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக ஏற்கனவே சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதிரடி சோதனை: இந்நிலையில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று புதிய வழக்கை பதிவு செய்தனர். மேலும், இது தொடர்பாக, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் சிலரது வீடுகளிலும், ஸ்டார்நெட் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் அதிரடிச் சோதனை நடத்தினர். சென்னை உட்பட நாடு முழுவதும் ஒன்பது இடங்களில் நேற்று சோதனை நடத்தினர். சென்னையில் நுங்கம்பாக்கம், அண்ணா சாலை, ஆர்.கே.மடம் சாலையில் அமைந்துள்ள பி.எஸ்.என்.எல்., அலுவலகங்களில் உள்ள அதிகாரிகளிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், வை-மேக்ஸ் ஒப்பந்தம் பெற்ற ஸ்டார்நெட் கம்யூனிகேஷனைச் சேர்ந்த சென்னை அதிகாரிகளிடமும் விசாரணை நடந்துள்ளது.
ராஜாவுக்கு வேண்டிய நிறுவனம்: ஸ்டார்நெட் கம்யூனிகேஷன் நிறுவனம், முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ராஜாவுக்கு நெருக்கமான நிறுவனம் என்றும், ஆனாலும், நேற்று பதிவு செய்யப்பட்ட வழக்கில் ராஜாவின் பெயர் இடம் பெறவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இத்தகவலை சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை தொடர்ந்து, தற்போது புதிய ஊழல் தொடர்பான விவகாரம் கிளம்பியுள்ளது.
தவித்த நிருபர்கள்: சென்னையில் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில், சி.பி.ஐ., ரெய்டு என தகவல் பரவியதும், எந்த அலுவலகத்தில் சோதனை நடத்துகின்றனர் என்ற தகவல் உடனே தெரியாததால், நகரில் உள்ள முக்கியமான பி.எஸ்.என்.எல்., அலுவலகங்கள் அனைத்தையும், ஊடகங்களைச் சேர்ந்த நிருபர்கள் மற்றும் போட்டோகிராபர்கள் முற்றுகையிட்டனர். இதில், ஒரு சில பி.எஸ்.என்.எல்., அலுவலகங்களில் பத்திரிகையாளர்கள் நுழைந்ததும், அங்குள்ள காவலாளிகள் அவர்களை தடுத்து நிறுத்தியதோடு, புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதையும் தடுத்தனர். இதனால், பத்திரிகையாளர்களுடன் காவலாளிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரத்திற்குப் பின்னரே எந்தெந்த பி.எஸ்.என்.எல்., அலுவலகங்களில் சோதனை நடக்கிறது என்ற விவரம் தெரியவந்தது.
15 இடங்களில் வை-மேக்ஸ்: கம்பியில்லா வை-மேக்ஸ் சேவையை, சென்னை தொலைபேசி வட்டம், சோதனை முறையில், முதலில் ஊத்துக்கோட்டையில் அறிமுகப்படுத்தியது. இதையடுத்து, கடந்த சில வாரங்களுக்கு முன், உத்திரமேரூர், செங்கல்பட்டு அண்ணா நகர், மறைமலை நகர், கும்மிடிப்பூண்டி சிப்காட், கேளம்பாக்கம், திருவள்ளூர், ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், மணலி நியூ டவுன், மேல்மருவத்தூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், தட்சூர், மேடவாக்கம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 15 இடங்களில் இச்சேவையை துவக்கியது குறிப்பிடத்தக்கது.
